பிகார் பேரவைத் தேர்தலில் பெற்ற வரலாற்று வெற்றிக்கு பிகார் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பிகாரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை(நவ.14) தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. அதேவேளையில், பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்த நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நல்லாட்சி, வளர்ச்சி, மக்களின் பேராதரவு, சமூக நீதி ஆகியவை வெற்றி பெற்றுள்ளன. 2025 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் ஈடு இணையற்ற வெற்றியைப் பெற்றுத்தந்த பிகார் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் தீர்ப்பு அவர்களுக்காக உழைப்பதற்கு வலிமையை அளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
