இந்தியாவின் 73வது குடியரசு தினம் தலைநகர் டெல்லியிலும், மாநிலங்கள் தோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக, ராஜபாதை வழியாக இடம்பெற்ற அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகளும், படையணிகளும் அணிவகுத்துச் சென்றன.
இந்தியாவின் 73வது குடியரசு தினவிழாவினை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு தின விழாவையொட்டி ராஜபாதையில் முப்படைகளின் கம்பீர அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும், நடைபெற்றன.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காலை 10.30 மணிக்கு புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.அதனை தொடர்ந்து அணிவகுப்புக்கள் இடம்பெற்றன.
தமிழகத் தலைநகர் சென்னையின் மெரினா கடற்கரையில் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி காலை 8 மணிக்கு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சென்னையில் வரலாற்றை பறைசாற்றும் வகையில் தமிழக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம் பெற்றது.
தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களை சிறப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஊர்த்திகளில், பாரதியார், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, விஜயராகவாச்சாரி, சுதந்திரத்திற்காக போராடிய வேலுநாச்சியார், குயிலி, கட்டபொம்மன், பூலித்தேவன்,அழகுமுத்துக்கோன் ஆகியோரின் சிலைகளும், மருது சகோதரர்கள் வழிப்பட்ட காளையார் கோவில் கோபுரம் ஆகியவை இடம்பிடித்திருத்தன.
கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக, சென்னையில் குடியரசு தின விழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.