தமிழ் சொற்களால் வணிக நிறுவனங்களை அடையாளப்படுத்துங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை அருகே உள்ள மதுராந்தகத்தில் வணிகர்கள் கோரிக்கை பிரகடன மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்மராஜா மற்றும் ஆயிரக்கணக்கான வணிகர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் சில முக்கிய அறிவுப்புகளை மேடையில் பேசினார். வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து நிரந்தர உறுப்பினர்களாக இருப்போருக்கான உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் கட்டணமில்லா உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்கள்
நீடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உணவுப் பொருட்கள் விற்பனை தவிர்த்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு சுய சான்றிதழ் அடிப்படையில் தொழில் உரிமம் வழங்கப்படும் எனவும் ஸ்டாலின் கூறினார்.
அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் வணிக நிறுவனங்களை திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது என கூறிய முதலமைச்சர், கடைகளுக்கு நல்ல தமிழ் பெயரைச் சூட்டுங்கள்; தனித் தமிழ் சொற்களால் உங்களது வணிக நிறுவனங்களை அடையாளப்படுத்துங்கள்; ஆங்கில பெயர்களை மாற்றிவிட்டு
தமிழில் பெயர் சூட்டுங்கள் என வலியுறுத்தினார்.