தற்போது தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை தயாரிப்பதற்காக 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தாலும், நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரவில்லை.
இலவச வேட்டி, சேலை தயாரிக்க விசைத்தறிகளுக்கு நூல் இன்னும் வழங்காததால் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வேட்டி, சேலை விநியோகிக்க முடியாத சூழல் உருவாகியிருப்பதாக நெசவாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு சுமார் ஒரு கோடியே 80 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்குகிறது. இவற்றை தயாரிக்க ஆறு மாதங்கள் தேவைப்படும் என்பதால் ஆண்டுதோறும் ஜூன் மாதம் நிதி ஒதுக்கப்பட்டு விசைத்தறிகளுக்கு பாவுநூல், ஊடை நூல் உள்ளிட்ட மூலப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை தயாரிப்பதற்காக 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தாலும், நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரவில்லை. இதனால், ஜூன் மாதம் உற்பத்தியை தொடங்க வேண்டிய வேட்டி, சேலை தயாரிப்பு பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. மேலும், ஒரு லட்சத்து 30 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இனிமேல் டெண்டர் விட்டு நூல் அனுப்ப முயன்றாலும் நூல்களுக்கு சாயம் இடும் பணிகள் அக்டோபருக்குள் தான் முடியும் என்றும், மூன்று மாதங்களுக்குள் ஒட்டுமொத்த மக்களுக்கும் வேட்டி, சேலைகளை வழங்க முடியாது என்றும் நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்