மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
சட்டப்பேரவையை இரண்டு நாட்கள் புறக்கணித்த அதிமுகவினர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால் இன்றைய கூட்டத்தில் கடுமையான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் திகதி தொடங்கியது. முதல் நாளே, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதற்கு முன்னாடியே, தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். தமிழகத்திற்கு பல கோடி ரூபாய் கடன் இருக்கிறது, அதற்கு கடந்த அதிமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை தான் காரணம் என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
பட்ஜெட் மீதான விவாதங்கள் கடந்த 19ம் திகதி வரை நடைபெற்று முடிந்த நிலையில், பேரவைக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இ்ந்நிலையில் சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது.
இதனால் சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று கடுமையான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது