இத்தாலியிலுள்ள ரஷ்யர்களுக்குச் சொந்தமான படகுகள் மற்றும் சொகுசு உல்லாச விடுதிகளைக் கைப்பற்றுமாறு உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நேற்று இத்தாலியப் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போது, இத்தாலியை வலியுறுத்தினார்.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி செவ்வாயன்று இத்தாலிய பாராளுமன்றத்தில் கானொலியூடாக ஆற்றிய உரையின் போது, ரஷ்யாவின் பெரும் பணக்காரர்களது விளையாட்டு மைதானமாக இத்தாலி இருப்பதை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.
“ஒரு தனி நபரால் தூண்டப்பட்ட போரில் இருந்து தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் இருந்த உக்ரைன் தாய்க்கு இத்தாலியில் முதல் குழந்தை பிறந்துள்ளது. முதல் நாளிலிருந்தே எங்கள் வலியைப் பகிர்ந்து கொண்டீர்கள், உக்ரேனியர்களுக்கு அரவணைப்புடனும் வலிமையுடனும் உதவுகிறீர்கள். தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறிய பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடங்கிய 60,000 உக்ரேனியர்களை, இத்தாலி காப்பாற்றியுள்ளது. டசின் கணக்கான உக்ரேனிய குழந்தைகள் உங்கள் மருத்துவமனைகளில் உள்ளனர். இவற்றுக்கெல்லாம் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்." என தனது நாட்டிற்கு இத்தாலி வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்து தனது உரையினைத் தொடங்கினார் ஜெலென்ஸ்கி.
அவரது உரையின் தொடர்ச்சியில் இத்தாலியின் ஆட்சியாளர்களிடம் ரஷ்யாவின் பெரும் பணக்காரர்களின் விளையாட்டு மைதானமாக இருந்து தங்கள் நாட்டை நிறுத்துமாறு வலியுறுத்தினார்.
" நாங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக புடினின் ஊழல் குறித்து விசாரித்து வருகிறோம். அதில் நாம் உறுதியாக அறிந்த ஒன்று உள்ளது. புடின் ஒருபோதும் தனது சொந்த பெயரில் சொத்துக்களை வைத்திருப்பதில்லை. எங்கள் நாட்டின் மீது படையெடுத்த மக்களை வரவேற்கும் இடமாக இத்தாலி இருக்க வேண்டாம். இத்தாலி நீண்ட காலமாகவே ரஷ்யாவின் உயரடுக்கின் சிறந்த விடுமுறை இடமாகும். இதனால் டஸ்கனியில் இருந்து சார்டினியா தீவு வரை சொகுசு வில்லாக்கள் மற்றும் நாட்டின் துறைமுகங்களில் உள்ள மூர் சூப்பர் வில்லாக்கள் ஆகியவை ரஷ்யர்களின் சொத்துக்களாக உள்ளது. அவர்களது சொத்துக்கள், கணக்குகள், அவர்களின் படகுகள், ஷெஹராசாட் முதல் சிறியது வரை, ரஷ்யாவில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள அனைவரின் சொத்துக்களையும் முடக்க வேண்டும்,'' என்றார்.
உலக நாடுகளின் பாராளுமன்றங்களில் உரையாற்றிவரும் ஜெலென்ஸ்கியின் உரைகள் உள்ளூர் பார்வையாளர்களை கவனமான இலக்காகக் கொண்டுள்ளன. இத்தாலிக்கான அவரது உரையிலும் அது தெளிவுறத் தெரிந்தது. வரலாற்று ரீதியாக, உக்ரைன் உலகிற்கு தானிய ஏற்றுமதி நிலமாக இருந்து வருகிறது. ஐ.நா.வின் உலக உணவுத் திட்டமானது அதன் உலகளாவிய கோதுமை விநியோகத்தில் ஏறக்குறைய பாதியை போருக்கு முன்பு உக்ரைனிடமிருந்து வாங்கியது.
"எங்களது நிலங்களில் இனி எப்போது அறுவடை கிடைக்கும், ஏற்றுமதி செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியாது. மக்காச்சோளம், எண்ணெய், கோதுமை, வாழ்க்கைக்குத் தேவையான பல பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது. இது கடல் கடந்த உங்கள் அண்டை நாடுகளையும் பாதிக்கிறது. விலைகள் அதிகரித்து வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உங்கள் பக்கங்களிலுமிருந்து உதவி தேவைப்படும், ”என்று அவர் கூறினார்.
ஜெலென்ஸ்கியின் உரைக்குப் பிறகு இத்தாலியப் பிரதமர் மரியோ டிராகி பேசுகையில், ரோம் இதுவரை 530 மில்லியன் யூரோ படகு உட்பட, ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ரஷ்ய தன்னலக்குழுக்களுக்கு சொந்தமான 800 மில்லியன் யூரோ மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
ஆயினும் டஸ்கன் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள பல மில்லியன் டாலர் மெகா படகு Scheherazade உரிமையானது, தற்போது அது ஒரு ரஷ்ய தன்னலக்குழுவினுடையது அல்லது ஒருவேளை ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடையது என்ற ஊகங்கள் உள்ளதாயினும் ஆதாரங்கள் இல்லை.
இத்தாலிய அரசியல் சக்திகளுக்கும் ரஷ்யாவிற்க்கும் இடையிலான நீண்டகால உறவுகள் காரணமாக மாஸ்கோ மீது கடுமையான தடைகளை அமல்படுத்துவதில் இருந்து இத்தாலி பின்வாங்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பனிப்போர் காலத்துக்கு முற்பட்டது. ஆனால் 2021 ஆம் ஆண்டில், பிரதம மந்திரி மரியோ ட்ராகி ஐரோப்பிய சார்பு, நேட்டோ சார்பு நிலைப்பாட்டுடன் பதவியேற்றபோது இந்த நிலைமை மாறியது.
சில்வியோ பெர்லுஸ்கோனி முதல் மேட்டியோ சால்வினி வரை டிராகியின் கூட்டணி அரசாங்கத்தில் உள்ள பல கட்சிகள் ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தாலும், அனைத்தும் ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பை கண்டித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.