உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. " உக்ரைன் தலைநகர் கியேவை ஏவுகணைகள் தாக்கும். முழு அளவிலான படையெடுப்பு தொடங்கப்பட்டது." டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நெருக்கடியானது கிழக்கு உக்ரைனில் இராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்ததைத் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் தகவல்களின்படி, ரஷ்யாவின் முதற்கட்டத் தாக்குதலில், குறைந்தது எட்டு பேர் இறந்துள்ளதாகவும், மற்றும் 19 பேர் காணவில்லை எனவும் தெரிய வருகிறது.
இதேவேளை ரஷயாவின் படைநகர்த்தும் முடிவு குறித்து ஐரோப்பியத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் "உக்ரைன் மீது போரை அறிவிக்கும் ரஷ்யாவின் முடிவை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளுக்கு உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும்" எனவும் தெரிவித்துள்ளதுடன், தேசிய பாதுகாப்பு கவுன்சிலையும் அவசரமாகக் கூட்டியுள்ளார்.
ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக், "உக்ரைன் மீதான தாக்குதல் மூலம், புடின் சர்வதேச ஒழுங்கின் மிக அடிப்படையான விதிகளை மீறியுள்ளார். இந்த அவமானகரமான நாளை உலக சமூகம் மறக்காது. எங்கள் முழுமையான ஒற்றுமை உக்ரைனுக்கு செல்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.
"உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை சுவிட்சர்லாந்து முற்றிலும் கண்டிக்கிறது. ஐரோப்பாவில் அதிர்ச்சியான காலை இது. இராணுவ ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்தவும், உக்ரைன் பிரதேசத்தில் இருந்து தனது படைகளை திரும்பப் பெறவும் ரஷ்யாவை நாங்கள் வலியுறுத்துகிறோம். இது சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறும் செயலாகும். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும். அப்பாவி பொதுமக்களைப் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்." சுவிற்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் இக்னாசியோ காசிஸ் கூட்டமைப்பின் ட்விட்டர் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய பிரதம மந்திரி Fumio Kishida, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முடிவில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு "சர்வதேச ஒழுங்கின் அடித்தளத்தை அசைக்கிறது, இது தற்போதைய நிலையை மாற்ற ஒருதலைப்பட்ச முயற்சிகளை அனுமதிக்காது" என்று கூறினார். டோக்கியோ ரஷ்யாவை கடுமையாக கண்டிக்கிறது. நாங்கள் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முயற்சிகளை ஒருங்கிணைத்து, இந்த பிரச்சினையை விரைவில் தீர்ப்போம்.