உக்ரைன் தலைநகர் கீயேவ் மீது இன்று வெள்ளி அதிகாலை ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் தொடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் நோக்கி முன்னேறும் ரஷ்ய துருப்புக்கள் கியேவிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இத்தாக்குதல் குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ட்விட்டரில் எழுதிய குறிப்பில், " தலைநகரில் இரண்டு வலுவான ஏவுகணை வெடிப்புகள் நடந்தன. உக்ரேனிய படைகள் ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கியதில், அவை இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் மீது விழுந்தது. எங்கள் தலைநகர் கடைசியாக 1941 இல் நாஜி ஜெர்மனியால் தாக்கப்பட்டபோது இதுபோன்ற ஒன்றை அனுபவித்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
கியேவிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஷ்ய டாங்கிகள், பெலாரஸ் வழியாக உக்ரைனுக்குள் நுழைந்துள்ளன. தலைநகர் கியேவைக் கைப்பற்றும் நோக்கில் நகரும் இப்படைகள், அங்கிருந்து சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. முன்னதாக அவை செர்னோபியில் உள்ள அணுஉலைப் பகுதியினை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.
கியேவை சுற்றி வளைத்து நாட்டின் அரசாங்கத்தை கவிழ்ப்பது பொதுவான இலக்காக இருந்தாலும் கூட. உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ரஷ்ய படைகள் ஏற்கனவே 800 பேரை இழந்துள்ளதாகவும், ஏழு விமானங்கள், ஆறு ஹெலிகாப்டர்கள், 130 கவச போர் வாகனங்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட டாங்கிகள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை 137 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 316 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருப்பதாகவும் அறிய வருகிறது.
ரஷ்ய ஆயுதப் படைகள் இப்போது தலைநகர் கியேவின் வாயில்களில் உள்ள போதும், " நானும் எனது குடும்பத்தினரும் இங்கேயே இருக்கிறோம்" என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்சி கூறியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனை அரசியல்ரீதியாக அழித்தொழிக்கும் இலக்காக ரஷ்யா அவரை அடையாளப்படுத்தியிருக்கும் நிலையில், நாட்டின் தலைவிதி எமது படையினர் மற்றும் எமது மக்களைச் சார்ந்தது என ஜனாதிபதி மீண்டும் கூறியுள்ளார்.