free website hit counter

சுவிஸ் மக்களைப் போல் உக்ரேனியர்கள் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் : உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ணில் இன்று நடைபெற்ற உக்ரைனுக்கான ஒற்றுமை ஆர்ப்பாட்டத்தில் உக்ரைன்அதிபர் நேரலையில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, " சுவிஸ் மக்களைப் போல் உக்ரேனியர்கள் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். " என்றார்.

தலைநகர் பேர்ணில் பல ஆயிரம் பேர், போருக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் நடந்த ஒருமைப்பாட்டின் ஆர்ப்பாட்டத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் தொலைவில் இருந்தாலும் நேரலையில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உணர்வு பூர்வமாக உரையாற்றினார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள உக்ரேனிய தூதரகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. பேர்ண் மேயர் அலெக் வான் கிராஃபென்ரிட் இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில், “இந்தப் போரில் யார் தோற்பார்கள் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். போர்க்குற்றவாளியாக அவரது கல்லறைக்குச் செல்லும் புடினுக்கு இது ஒரு தோல்வியாக இருக்கும்." என்று குறிப்பிட்டார்.

"அன்புள்ள வோலோடிமைர், ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் அமைதி ஆகியவற்றின் அடிப்படை மதிப்புகளை நீங்கள் பாதுகாக்கும் விதம் எங்களை மகிழ்விக்கிறது. சுவிட்சர்லாந்து, நடுநிலை மற்றும் ஒற்றுமையை ஒருங்கிணைத்து வன்முறைக்கு எதிராக உறுதியுடன் போராடுகிறது " என்று கூட்டமைப்பின் தலைவர் இக்னாசியோ காசிஸும் கலந்து கொண்டு பேசினார்.

"சுவிற்சர்லாந்து மற்ற நாடுகளின் மீது அமைதி மற்றும் செல்வாக்கின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது" என்று தனது பேச்சினைத் தொடங்கிய உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கி "உக்ரேனியர்கள் சுவிஸ் மக்களைப் போல, செழிப்பு, அமைதி மற்றும் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுக்கு இது சாதாரணமானது. ஆனால் இதற்காக நாங்கள் போராட வேண்டும். கடந்த பிப்ரவரி 24 மோதல் வெடிக்கும் வரை, நாங்கள் சுமுகமான இந்த பாதையில் இருந்தோம். ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது. ஆனால் இந்த நிலை உக்ரேனியர்களுக்கு மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதற்குமானது. " எனத் தொடர்ந்தார்.

அவர் தகது பேச்சின் இறுதியில் பல பெரிய நிறுவனங்களைப் போலல்லாமல், ரஷ்யாவை இன்னும் கைவிடாத சுவிஸ் உணவு நிறுவனமான நெஸ்லேவை விமர்சித்தார். "ரஷ்யாவில் நெஸ்லேயின் வணிகம் இன்னும் இயங்குகிறது. அதே நேரத்தில் மாரியுபோல் உணவு அல்லது மின்சாரம் இல்லாமல் பாழடைந்துள்ளது" எனக் குறிப்பிட்டார். இறுதியாக, "நல்ல உணவு, நல்ல வாழ்க்கை" என்ற பன்னாட்டு நிறுவனங்களின் முழக்கத்தின் முரண்பாட்டை மேற்கோள் காட்டி தனது பேச்சினை நிறைவு செய்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction