இத்தாலியில் கொரோனா தொற்றின் நான்காவது அலை தொடங்கிவிட்டது என இத்தாலியின் சுயாதீன கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
இத்தாலியின் சுயாதீன சுகாதார கண்காணிப்பு, ஜிம்பே அறக்கட்டளையால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில், கடந்த ஏழு நாட்களில் கோவிட் தொடர்பான இறப்புகள் மற்றும் புதிய நோய்த்தொற்றுகள் மிகவும் அதிகரித்துள்ளன என்பதன் அடிப்படையில், இத்தாலி இப்போது கொரோனா வைரஸின் நான்காவது அலைக்குள் நுழைந்துள்ளது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஜிம்பே தலைவர் நினோ கார்டபெல்லோட்டா கூறுகையில், அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றுக்களால் ஆவணப்படுத்தப்பட்டதை விட வைரஸ் வேகமாகப் பரவுகிறது. நாங்கள் தொற்றின் நான்காவது அலைக்குள் நுழைந்துள்ளோம் என்பது உண்மையே எனக் குறிப்பிட்டுள்ளதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுயாதீன கண்காணிப்பு அறிக்கையின் புதிய புள்ளி விபரங்களின்படி, 15 வார சரிவுக்குப் பிறகு, இறப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஏனெனில் கடந்த ஏழு நாட்களில் இந்த எண்ணிக்கை 46 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது முந்தைய வாரத்தின் 76 இலிருந்து 111 ஆக உயர்ந்துள்ளது. மேலும் முந்தைய வாரத்தை விட 65 சதவிகிதம் புதிய தொற்றுக்களின் அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
கோவிட் நோயாளிகள் ஆக்கிரமித்துள்ள படுக்கைகளின் எண்ணிக்கை ஜூலை 16 ஆம் திகதி 1,088 லிருந்து ஜூலை 27 அன்று 1,611 ஆக உயர்ந்துள்ளது. இதுபோலவே தீவிர சிகிச்சைக்கான தினசரி சேர்க்கையும் மெதுவாக வளர்கிறது என GIMBE அறக்கட்டளையின் செயல்பாட்டு இயக்குநர் மார்கோ மோஸ்டி கூறுகின்றார்.
இதேவேளை, ஆகஸ்ட் நடுப்பகுதியில் இத்தாலிக்கு வரவிருக்கும் கூடுதல் மில்லியன் ஃபைசர் டோஸ் பற்றிய அறிவிப்பைத் தொடர்ந்து, செப்டம்பர் இறுதிக்குள் இத்தாலியு முழுவதும் முழுமையாக தடுப்பூசி போடப்படும் என்ற அரசாங்கம் எண்ணுகின்றது.