free website hit counter

இளையவர்களின் உறுதியில் நிறைவுற்றது கிரான்ட்ஸ் மொன்தானா அஞ்சலி நிகழ்வு !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தில் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, வலே மாநிலத்தின் 'கிரான்ட்ஸ் மொன்தானா' பகுதியில் நடந்த தீவிபத்தில் பலியானவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, தேசிய துயர் நினைவு நாளாக அறிவிக்கப்பட்ட இன்றைய நாளில், கிரான்ட் மொன்தான மற்றும் மார்த்தினி நகரங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.  

பிற்பகல் 2.00 மணிக்கு, தேவாலயங்களின் மணிகள் ஒலிக்க, நாடு முழுவதிலும் மெளனப் பிரார்த்தனையுடன் கூடிய  அஞ்சலி செலுத்தப்பட்டது.  பிரான்ஸ், இத்தாலி, முதலான வெளிநாட்டுத் தலைவர்களுடன், சுவிற்சர்லாந்து மத்திய கூட்டாட்சித் தலைவர், வலே மாநிலத் தலைவர், உட்பட மேலும் பல அரச பிரதிநிதிகளும், அதிகாரிகளும், காவல்துறை, தீயணைப்புத்துறை வீரர்களுடன், துமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில், சம்பவத்தின்  சாட்சிகளாக  இருந்த மூன்று இளையவர்கள் வாசித்த செய்தி அனைவரையும் உருக்குவதாக இருந்தது. "அன்று மாலை, எல்லாம் விரைவாகவே நடந்து முடிந்தது. அது ஒரு பேரழிவு காட்சி; நாங்கள் அதை ஒருபோதும் மறக்க மாட்டோம், ஆனால் அதை பலமாக மாற்ற முடியும். பாதிப்புற்ற குடும்பங்களுக்கு, இந்த வலி வீணாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.  அதைப் பார்த்துக்கொள்வோம்" என மேரி ஆல்பிரெக்ட்  உணர்ச்சி பொங்கத் தெரிவித்தார். 

சோலால் ஹெமெண்டிங்கர்  பேசுகையில், "ஒட்டுமொத்தமாக, நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம், பாதிப்புற்ற அனைவருடனும் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். ஒரு கையறு நிலையில் இருந்த எங்களுக்கு உதவிய  காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்." 

இளையவர்களில் இறுதியாக பேசிய  அலின் மோரிசோலியின் உரை மிக ஆணித்தரமாகவும், உணர்ச்சி மிகுந்ததாகவும் இருந்தது.“நாங்கள் ஒரு பலவீனமான உலகில் வளரும் ஒரு தலைமுறை. எங்களுக்கு அச்சங்கள் பல இருந்தபோதிலும், எங்கள் தலைமுறை தொடர்ந்து முன்னேறி வருகிறது. வாழ்க்கையில் நாட்களைச் சேர்க்க முடியாது, ஆனால் வாழும் நாட்களை அர்த்தமுள்ளதாக்கலாம்.” என்றார்.

கூட்டமைப்பின் தலைவர் கை பர்மெலின் உரையாற்றுகையில், “சூழ்நிலைகள் கோரும் அடக்கத்துடன் நான் பேசுவேன். 2026 ஆம் ஆண்டின் தொடக்கமானது இளைஞர்களுக்கு உயர்வு தரும் வாக்குறுதிகளால் நிறைந்திருக்க வேண்டும். மாறாக, அவை திகில் நிறைந்த இரவின் சாம்பலில் எரிந்தன. எங்களைத் தாக்கிய இந்தத் துக்கம்,  சுவிட்சர்லாந்தை ஒரே குடும்பமாக மாற்றி,  இந்தச் சுமையைப் பகிர்ந்து கொள்ளும் நிலையைத் தோற்றுவித்துள்ளது. நம்முடன் இல்லாதவர்களின் நினைவுக்கு முன்னும், காயமடைந்த இளைஞர்களின் படுக்கைக்கு முன்னும், நம் நாடு தலைவணங்குகிறது. பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பங்களின் வாழ்க்கை, மீளமுடியாத துயரத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது" என்றார். 

வாலிஸ் மாநில கவுன்சிலின் தலைவர் மத்தியாஸ் ரெய்னார்ட் பேசுகையில் "ஜனவரி 1, 2026. இந்த நாளை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். ஒரு கனவாக மாறிய கொண்டாட்ட தருணம் அது. 40 ஆன்மாக்களையும் காயமடைந்தவர்களையும் நினைவுகூருவதற்காக, எந்த வார்த்தைகளும் வெற்றிடத்தை நிரப்ப முடியாது, ஆனால் மௌனம் போதாது. எனவே பேசுவோம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.  இந்த விழா அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு நேரமாகும். ஆயினும், இந்தத் துயர்த்தின் போது  மீட்பர்களாக உயர்ந்தவர்கள் அனைவருக்கும், அரசாங்கம் மற்றும் கன்டோன் சார்பாக,  நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்." என்றார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula