உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்புத் தொடங்கி ஒரு வாரத்தை நெருங்கும் நிலையில் போர் கடுமையாகியுள்ளது. உக்ரைன் நகரான கார்கிவ் மீது இராணுவ பராட்ரூப்பர்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை ரஷயா தொடுத்துள்ளது.
ரஷ்யப் படைகள் முக்கிய நகரமான கெர்சன் நகரைக் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. மற்றொரு நகரான மரியுபோல் இன்னும் முற்றுகையிடப்பட்ட நிலையிலள்ளது. இதற்கிடையில், கியேவ் மற்றும் மாஸ்கோ இடையேயான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று பெலாரஸில் அல்லது போலந்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தைகள் முறிவுறும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் சில இந்த யுத்தத்துக்குள் தன்னிச்சையாக உள்வாங்கப்படும் பேரபாயமும் உள்ளதாகச் சில கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனை துருப்புக்கள் அதிகாரபூர்வமாகக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை ரஷ்ய ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் நகரங்களில் இதுவே பெரியது. சில நாட்களாக முற்றுகைக் குள்ளாகி இருந்த நகரம், குறிப்பாக கடந்த சில மணிநேரங்களில் கடுமையான சண்டைக் களமாக இருந்துள்ளது. "ரஷ்ய இராணுவத்தின் பிரிவுகள் பிராந்திய தலைநகரான கெர்சனின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துள்ளன. சிவில் உள்கட்டமைப்பு மற்றும் பொது போக்குவரத்து ஆகியவை சாதாரணமாக செயல்படுகின்றன " என்று ரஷ்ய ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் இகோர் கோனாஷென்கோவ் கூறினார்.
இதேவேளை ரஷ்யத் தாக்குதலின் போது பொது மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. கியேவில் இருந்து மேற்கே 120 கிமீ தொலைவில் உள்ள சைட்டோமிர் நகரில் ஒரே இரவில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், மற்றும் 16 பேர் காயமடைந்தனர் என்றும், கியேவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போரோடியங்காவில் குடியிருப்புத் தொகுதி அழிக்கப்பட்டதாகவும், கார்கிவில் ஏவுகணைத் தாக்குதல்கள் நகரின் பிராந்திய காவல் துறையின் கட்டிடத்தையும் அதற்கு அடுத்துள்ள கராசின் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கட்டிடத்தையும் தாக்கியுள்ளன. கடந்த 12 மணி நேரத்தில், உக்ரைனின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 112 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உக்ரேனிய துணை வெளியுறவு அமைச்சர் கூறியதுடன் ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்குப் பின்னதான கானொளிகள் சிலவற்றையும் பகிர்ந்துள்ளார்.
உக்ரைனில் கடந்த வியாழன் தொடங்கிய ரஷ்ய படையெடுப்பில் இதுவரை குறைந்தது 136 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், இறந்தவர்களில் 13 குழந்தைகளும் இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் லிஸ் த்ரோஸ்ஸலின் பேச்சாளரின் கூற்றுப்படி, உண்மையில் இறந்தவர்கள் என்னிக்கையில் இன்னும் பலர் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
போர்கள நிலவரம் கடுமையடைந்திருக்கும் நிலையில், ரஷயா வான் வெளித் தாக்குதல்களை கடுமையாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கே முன்னேறும் படைகள் மற்றும் கார்கிவில் பராட்ரூப்பர்களின் பணி போன்ற ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் தொடரும் அதே வேளையில், ஏவுகணைகளின் தாக்குதலும் தொடர்கிறது. குறிப்பாக தலைநகர் கியேவ் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளும் மேற்குலக நாடுகளும் 'ரஷ்யா ரூடே' செய்திச் சேவையினை சகல தொடர்பு வழிகளிலும் தடைசெய்துள்ளதாக அறிவித்த சில மணிநேரங்களில், உக்ரைன் தலைநகர் கியேவ்விலுள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீதான ஏவுகணைத் தாக்குதலை ரஷயா மேற் கொண்டுள்ளது. இதன் மூலம் உக்ரைனின் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை முடக்க ரஷ்யா முயற்சிப்பதாக கருதப்படுகிறது.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய நாடுகள் விதிதுள்ள நிலையில், ரஷயாவிலிருந்து வெளியேறும் எவரும்,10,000 டாலருக்கும் அதிகமான வெளிநாட்டு நாணயத்துடன் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடைசெய்யும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கெர்சன் நகரம் ரஷ்யப் படைகளினால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, வாஷிங்டனில் இருந்து பேசிய அமெரிக்கத் தலைவர் ஜோ பிடன் "புடின் கியேவை இராணுவத்தால் சுற்றி வளைக்க முடியும், ஆனால் உக்ரேனிய மக்களின் இதயங்களையும் ஆன்மாவையும் அவரால் வெல்ல முடியாது." எனக் குறிப்பிட்டார்.
உக்ரைன் நாட்டை ரஷ்யா ஆக்கிரமித்ததில் இருந்து குறைந்தது 80,000 உக்ரைனியர்கள் வெளிநாட்டில் இருந்து உக்ரைனுக்கு திரும்பியுள்ளனதாகவும், மாநில எல்லைக் காவலர் சேவையை மேற்கோள் காட்டும் உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, பிப்ரவரி 24 க்குப் பிறகு உக்ரைனுக்குத் திரும்பிய பெரும்பாலான குடிமக்கள் ஆயுதப் படைகள், பிற இராணுவ அமைப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்புப் படைகளின் வரிசையில் சேர்ந்துள்ளதாகவும், கிய்வ் இன்டிபென்டன்ட் செய்தித்தாள் தெரிவிக்கிறது.
பெப்ரவரி 24 ல் ரஷ்ய இராணுவப் படையெடுப்பின் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, உக்ரைனில் இருந்து சுமார் 677,000 பேர் வெளியேறியுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஏறக்குறைய ஒரு வாரமாக நடந்து கொண்டிருப்பது "கேவலமான பொய்களின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படாத மற்றும் தூண்டப்படாத போர்" என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் "புடின் எந்த நேரத்திலும் உக்ரைனை தோற்கடித்து ஆக்கிரமித்து விடுவேன் என்று நம்பினார். ஆனால் உக்ரேனியர்கள் தைரியமாக எதிர்க்கிறார்கள் " எனக் குறிப்பிட்டார்.