இத்தாலி தற்போது கோவிட் தொற்றுநோய் கட்டுப்பாடுகளின் முடிவைப் பற்றி விவாதித்து வருகிறது. ஆனால் க்ரீன் பாஸ் தேவை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சமீப காலத்தில், ஐரோப்பாவின் பல நாடுகள் கோவிட் -19 சுகாதார நடவடிக்கைகளின் முடிவை அறிவித்துள்ளன. முகமூடி தேவைகள் மற்றும் தடுப்பூசிக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டிய கடமை உட்பட பல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இத்தாலிய அரசாங்கமும் தனது நாட்டில் விதிகளை தளர்த்துவதற்கான காலக்கெடுவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. ஆயினும், இதுவரை, இத்தாலியில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட திட்டங்கள் வெளியாகவில்லை.
மார்ச் 10 ம் திகதி முதல் மீண்டும் சினிமாக்கள் மற்றும் திரையரங்குகளுக்குள் உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதை அனுமதிக்கும் என்றும், அடுத்த வாரத்தில் விளையாட்டு அரங்கங்களின் திறனை 75 சதவீதமாகவும், பின்னர் ஏப்ரல் மாதத்திற்குள் 100 சதவீதமாகவும் அதிகரிக்க அரசாங்கம் அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 11 ம் திகதி நிலவரப்படி, இத்தாலியின் அரசாங்கம் இரவு விடுதிகளை மீண்டும் திறந்தது மற்றும் நாட்டின் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான ஆரம்ப கட்டத்தில் அனைத்து வெளிப்புற பொது இடங்களிலும் முகமூடிகளை அணிய வேண்டிய தேவையை நீக்கியது. பிரதம மந்திரி மரியோ ட்ராகி பிப்ரவரி தொடக்கத்தில், தளர்வு நடவடிக்கைகளுக்கான "காலவரிசை" விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார், இருப்பினும் இன்னும் கூடுதலான மாற்றங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஏப்ரல் மாதத்தில் பச்சை பாஸை ரத்து செய்ய இத்தாலி திட்டமிட்டுள்ளதாக, இத்தாலிய ஊடகங்களில் பரவலான ஊகங்கள் உள்ளன. இதற்கான காரணம், நாட்டின் அவசரகால நிலை மார்ச் 31 ல் முடிவடைகிறது. அவசரகால நிலை என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தாலிய அரசாங்கம் சிறப்பு ஆணை மூலம் சட்டங்களை கொண்டு வர அனுமதித்துள்ள நிபந்தனையாகும்.
இந்தக் காலக்கெடுவின் காரணமாக, இத்தாலியின் பெரும்பாலான கோவிட் சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு மார்ச் 31 கடைசித் திகதியாகும். ஆனால் இது இந்த விதிகள் அகற்றப்படும் திகதி என்று அர்த்தங்கொள்ள முடியாது.
"அவசரகால நிலை முடிவடைந்தவுடன் ஒரு புதிய கட்டம் நிச்சயமாகத் தொடங்கும், இது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் தளர்வு மூலம் சிறப்பிக்கப்படும்" என்று கடந்த வியாழன் செய்தியாளர்களிடம் பேசிய இத்தாலியின் துணை சுகாதார அமைச்சர் ஆண்ட்ரியா கோஸ்டா கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், முதலில், "நாங்கள் மூன்றாவது தடுப்பூசி டோஸ் நிர்வாகத்தை முடிக்க வேண்டும் . இன்னும் 12-13 மில்லியன் பூஸ்டர் டோஸ்கள் உள்ளன. இப்போதுள்ள வேகத்தில் சென்றால், மார்ச் நடுப்பகுதியில் 49 மில்லியன் மக்களுக்கு இதனை முடித்திருக்க முடியும். இது ஒரு புதிய சூழ்நிலை யை உருவாக்குவதுடன், க்ரீன்பாஸ் அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும்" என்று கூறினார்.