சுவிற்சர்லாந்தில் நேற்று புதன்கிழமை 17,634 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை தொற்றுக்கள் வேகமாக அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
சுவிற்சர்லாந்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை இது.
இவ்வாறான நிலையில் அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளாக எதை அறிவிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், "மூடுதல்களை உள்ளடக்கிய நடவடிக்கைகளின் அடுத்த தொகுப்பு தயாராக உள்ளது. ஆயினும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான நேரம் இன்னும் நேரம் வரவில்லை. அரசாங்கம் தற்போதைக்கு எந்த புதிய கட்டுப்பாடுகளையும் செயல்படுத்தவில்லை." என்று சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் ட்வீட் செய்துள்ளார்.
எவ்வாறாயினும், "Omicron மாறுபாட்டின் வீரியம் குறித்த துல்லியமான தரவு கிடைத்தவுடன், ஃபெடரல் கவுன்சில் மிக விரைவாக செயல்பட முடியும்", பெர்செட் மேலும் கூறினார்.
இதேவேளை சுவிஸ் காவல்துறை மற்றுமொரு எச்சரிக்கையைப் பொதுமக்களுக்கு விடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
சமீபத்திய நாட்களில், சுவிற்சர்லாந்தில் உள்ள பலருக்கு வெளிநாட்டு எண்களில் இருந்து அவர்களின் ஸ்மார்ட்போன்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன. அவை மோசடி தொலைபேசி அழைப்புக்கள் என்றும் அலட்சியப்படுத்தப்பட வேண்டும் என்றும் காவல்துறை கூறுகிறது.
அந்த அழைப்புக்களுக்கு பதிலளிக்கப்படாவிட்டால், இந்த எண்கள் "தவறவிட்ட அழைப்புகள்" எனக் காட்டப்படும். அதேவேளை அந்த எண்களுக்கு நீங்கள் திரும்ப அழைக்கும் போது, உங்களுக்குப் பணம் செலவாகும். இது உங்கள் ஃபோன் கணக்கில் பில் செய்யப்படும். ஆனால் அது வெளிநாடுகளில் உள்ள மோசடி செய்பவர்களுக்கு வருமானமாகச் சேரும்.
சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டு எண்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் எனவும், தொடர்ந்து ஈடையூறு ஏற்படுமாயின், தேசிய சைபர் பாதுகாப்பு மையத்திற்கு (NCSC) புகாரளிக்கலாம் என்று தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நிபுணர் தாமஸ் டுபென்டோர்ஃபர் தெரிவித்துள்ளார்.