free website hit counter

காப்பியும் புத்தகமும்

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காப்பிப்பழத்தை சுவைத்த ஆட்டு மந்தையின் மேய்ப்பவன் கண்டுபிடித்த காப்பி கொட்டைகளின் தனிச்சுவையும் நறுமணமும் அதன் பக்குவமான வறுவலில்தான் இருக்கிறது.

அதோடு காப்பி பரிமாறும் பாரிஸ்டாக்களின் கைவண்ணத்திலும் உள்ளது. ஒரு காப்பிக்கொட்டை சரி இல்லை என்றாலும் காப்பியின் சுவை கெடும். 

மேலைத்தய நாடுகளின் புத்தகக்கடைகளில் பெரும்பாலும் காப்பி கடையும் இணைந்தே செயற்படும். இது ஒருவித தொழில் யுக்தி என்றாலும் வாசகர்களையும் வாடிக்கையாளர்களையும் அதிகரிக்கச் செய்யும் சிறந்த வழி. 

வாழ்வில் முட்கள் கிடந்த பாதையை கடந்துவந்து; ஒரு புத்தகக்கடையை சுயமாக ஆரம்பிக்கும் கதையின் நாயகி லீ யோங்-ஜூ அக்கடையை இரண்டு வருடங்களுக்கும் மேல் தாங்கி பிடிக்க என்னவெல்லாம் செய்கிறார், அவரின் கனவை நோக்கிய பாதையில் கைகொடுத்தவர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் புத்தகங்களுடான நெருக்கம் என எல்லாமும் சேர்ந்து நாவலாகியிருக்கிறது " Welcome to Hyunam Dong Bookshop "

கொரியா தலைநகரில் இயங்கும் இப்புத்தகடையில் காப்பியும் விற்கப்படுகிறது. அந்த காப்பிக்காகவே வந்துபோகும் வாடிக்கையாளர்களும் உளர். நல்ல காப்பி தயாரிப்புக்கு வேறு ஒரு தனிக்கதையே நாவலோடு பயணிப்பது சுவாரஸ்யம்.  பிற புத்தகங்களின் அறிமுகப்படுத்தல்கள் மற்றும் பெரிய எழுத்தாளர்களின் யோசனைகளும் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளது. 

அதுமட்டுமல்ல குடும்ப உறவுமுறைகளில் ஏற்படும் ஏற்ற, இறக்கம் குறித்த பலவித புரிதல்களையும் இவ் நாவல் கதையின் ஊடே அலசுகிறது. 9 - 5 கடுகதி வேலைப்பளுவிலிருந்து விடுபட்டு சுயமாக முன்னேற விரும்பும் எவரும் ஒருமுறை இந்நாவலை வாசிக்கலாம். 

உலகின் ஜென் சி வாசிப்பாளர்கள்தான் அதிகமாக உள்ளதாகவும் மூத்தோர்களிடமே வாசிப்பு பழக்கம் குறைவாக உள்ளதாகவும் அண்மையில் ஒரு ஆய்வு தெரிவித்திருக்கிறது. இளம் தலைமுறையினரிடம் இப்பழக்கத்தை கொண்டுவரவே மாதம் ஒரு வாசகர் வட்டம், மௌன வாசிப்பு வட்டம், எழுத்தாளர்களின் சந்திப்பு என பல முயற்சிகள் சமூகவலைத்தளம் ஊடாக நடைபெறுவதை காணக்கிடைக்கையில் மகிழ்ச்சியே. 

சூடான ஒரு கோப்பை காப்பியுடன் நல்ல புத்தகம் ஒன்றை வாசித்திருக்கிறீர்களா? அவ்விரண்டின் சுவையும் கலந்த ரசனையை இப்புத்தகம் மூலம் பெறலாம். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula