free website hit counter

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் - 4 (We are Not Alone - Part - 4) - மீள்பதிவு

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த தொடரில் விண்ணில் பூமியில் உள்ள மனிதக் குடியேற்றத்துக்கு இணையான அறிவார்ந்த உயிரினங்கள் உள்ளனவா என்ற தேடல் தொடர்பான SETI என்ற செயற்திட்டம் தொடர்பாகவும், பூமியின் தரையில் அமைந்திருக்கும் மிக முக்கியமான இரு ஆப்டிக்கல் தொலைக் காட்டிகளான சுபாரு (SUBARU) மற்றும் எல்ட் (ELT) என்பவற்றின் அறிமுகத்தையும் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சி இனி..

Subaru ground telescope Hawai

முதலாவது தொலைக் காட்டியான சுபாரு அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஜப்பானின் NAOJ என்ற விண்வெளி அவதான தேசிய அமைப்பினால் நிறுவப் பட்டு பராமரிக்கப் பட்டு வரும் MKO என்ற பல வான் அவதான நிலையங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 13 796 அடி உயரத்தில் உள்ள இந்த தொலைக் காட்டியில் தான் ஒற்றைக் கிறிஸ்டல் கல்லில் செதுக்கப் பட்ட உலகின் மிகப் பெரிய கண்ணாடி அமைந்துள்ளது. கொரோனாகிராபிக் வகை தொலைக் காட்டியான (Coronagraphic telescope) இது ஒரு நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியை நீக்கி விடுவதால் அவற்றின் அருகே இருக்கும் வெளிப்புறக் கிரகங்களது (Exoplanets) உருவத்தை வானியலாளர்கள் நேரடியாகப் படம் பிடிக்க முடிகின்றது.

ELT Space Telescope

மறுபுறம் 2024 ஆமாண்டு முதல் இயங்கவுள்ள ELT தொலைக் காட்டி கண்ணுக்குத் தெரியும் ஒளி, மற்றும் அகச்சிவப்பு நிறமாலைகளைக் கொண்ட படங்களை (near infrared spectrum images) இன்று விண்ணில் இயங்கும் ஹபிள் தொலைக் காட்டியை விட 16 மடங்கு துல்லியமாகப் பெறவல்லது ஆகும்.

நாம் முன்பே கூறியிருந்தவாறு பௌதிகவியல் கொள்கைகளின் படி நாம் அவதானிக்கும் கிரகத்தில் இருக்கும் வளிமண்டலத்தில் அங்கு உயிரினங்கள் வாழ்ந்து அவற்றின் வாயுக்கள் சேர்ந்திருந்தால் அதற்கான சான்றை நாம் அங்கிருந்து வரும் ஒளியில் இருந்து பெற முடியும் என்பது முக்கியமான தடயமாகும். இவை மட்டுமன்றி பாறைகளால் ஆன தன் நட்சத்திரத்தை மிகவும் அருகே சுற்றி வரும் கிரகமாக இருந்தாலும் அங்கு கண்டங்கள் உள்ளதா? சமுத்திரங்கள் உள்ளதா? முகில்கள் உள்ளனவா? மற்றும் உயிர் வாழ்க்கை உள்ளனவா போன்ற கேள்விகளுக்கான விடையை அக்கிரகத்தில் இருந்து வரும் ஒளியை அது சுற்றி வரும் நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியில் இருந்து பிரித்து அறிவதன் மூலம் பெற முடியும்.

நாம் இன்று உருவாக்கி வரும் அடுத்த தலைமுறை தொலைக் காட்டிகளால் (பூமியைச் சுற்றி வரக்கூடிய) இவ்வாறான Exoplanets களை இன்னும் துல்லியமாக இனம் காண முடியும். இந்த அடுத்த தலைமுறைத் தொலைக் காட்டிகள் தொடர்பான விபரத்தை படிப்படியாக பார்ப்போம்.

நாசாவின் New worlds Mission என்ற புதிய செயற்திட்டத்தின் பகுதியாக பூமியின் சுற்று வட்டப் பாதையில் ஏற்கனவே செலுத்தப் பட்டும் இனி வரும் காலங்களில் செலுத்தப் படவும் உள்ள 4 முக்கிய செய்மதி தொலைக் காட்டிகள் தான் நமது அடுத்த தலைமுறை தொலைக் காட்டிகள் ஆகும்.

2005 ஆமாண்டு தொடங்கப் பட்ட இந்த செயற்திட்டத்தின் கீழ் முதலாவது முக்கிய தொலைக் காட்டி 2018 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட TESS (Transitting Exoplanet Survey Satellite) ஆகும். இதில் 10.5 cm நீளம் கொண்ட 4 முக்கிய கமெராக்கள் உள்ளன. உயிர்வாழ்க்கை கொண்டிருக்கக் கூடிய மிகப் பிரகாசமான நட்சத்திரங்களைச் சுற்றி வரும் சிறிய கிரகங்களை இனம் காண்பது இதன் இலக்காகும்.

2 ஆவதாக ஜேம்ஸ் வெப் விண் தொலைக் காட்டி அதாவது JWST அடுத்த வருடம் அதாவது 2021 ஆமாண்டு ஆக்டோபர் 31 ஆம் திகதி இது விண்ணில் செலுத்தப் படவுள்ளது. இந்தத் தொலைக் காட்டி இன்று விண்ணில் இயங்கி வரும் ஹபிள் தொலைக் காட்டிக்குப் பதிலாக அதை விடத் துல்லியமாக நாசாவின் வான் பௌதிகவியல் இலக்குகளுக்காகவும் தொழிற்படவுள்ளது. $10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிக செலவில் தயாரிக்கப் பட்டிருக்கும் இது 10 வருடங்களாவது மிகவும் சிறப்பாகச் செயற்படும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது.

6.5 மீட்டர் நீளம் கொண்ட இது பூமியில் இருந்து பல மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள், வெளிப்புறக் கிரகங்கள் குறித்தும் ஆய்வு செய்ய வல்லது. இதில் இருக்கும் முக்கிய 4 கருவிகளில் அகச்சிவப்புக் கதிர் கமெராக்கள் (Infrared cameras) மற்றும் Spectrographs போன்றவை உள்ளன. Bigbang என்ற நிகழ்வுக்குப் பின்பு முதலாவது நட்சத்திரங்களும், அண்டங்களும் தோன்றத் தொடங்கிய காலம் அதாவது 100 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட பிரபஞ்சத்தைக் கூட இத்தொலைக் கட்டியால் பார்க்க முடியும் எனப்படுகின்றது.. (அது எவ்வாறு 100 மில்லியன் வருடங்களுக்கு முன்பு கடந்த காலத்தை இதனால் பார்க்க முடியும் என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றலாம்.. அதற்கான விளக்கத்தை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்..)

WFIRST space telescope

3 ஆவது தொலைக் காட்டி 2025 ஆமாண்டு பூமியின் சுற்று வட்டப் பாதைக்குச் செலுத்தத் திட்டமிடப் பட்டிருக்கும் WFIRST அதாவது ஆங்கிலத்தில் Wide Field Infrared Survey Telescope என்றழைக்கப் படும் செய்மதித் தொலைக் காட்டியாகும். நான்ஸி கிரேஸ் றோமன் தொலைக் காட்டி என்றும் இது அழைக்கப் படுகின்றது. பெயரிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் இது அகச்சிவப்புக் கதிர்களை ஆய்வு செய்யும் தொலைக் காட்டி என்று.. ஆனால் இதற்கு இன்னும் இரு சிறப்புக்கள் உள்ளன.

Nancy Grace Roman

முதலாவது நாசாவில் பெண்களுக்கென தனி இடத்தையும், பெருமையையும் முதலில் பெற்றுத் தந்து நாசா தலைமையகத்தில் முக்கிய பதவியையும், ஹபிள் தொலைக் காட்டி செயற் திட்டத்திலும் ஈடுபட்ட நான்ஸி கிரேஸ் றோமன் என்ற அமெரிக்கப் பெண்மணியின் பெயரில் இந்தத் தொலைக் காட்டி அழைக்கப் படுவது. இரண்டாவது, இன்று வானியலாளர்களை மிகப் பெரும் மர்மத்தில் ஆழ்த்தி வரும் பிரபஞ்சத்தின் 68% வீதத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் கரும் சக்தி (Dark Energy) குறித்த கூட்டாய்வான JDEM (Joint Dark Energy Mission) இல் இந்தத் தொலைக் காட்டி பங்கு பெறுவதாகும்.

Starshade telescope

4 ஆவது தொலைக் காட்டி இன்னும் விண்ணுக்குச் செலுத்த தினம் குறிக்கப் படாத, அதே நேரம் கட்டுமானத்தில் இருந்து வரும் Starshade என்ற செய்மதி ஆகும். இந்த Starshade தொலைக் காட்டி WFIRST உடன் சேர்ந்தே தொழிற்படவுள்ளது. ஆர்கமி (Orgami) என்று இன்று நவீன தொழிநுட்ப உலகில் மிகவும் பிரபல்யம் அடைந்து வரும் ஜப்பானிய பண்டைக் கால சிறப்பு மிக்க கேத்திர கணித அறிவியல் கோட்பாடுகள் (Algorithms) மூலம் Starshade இன் மலர் இதழ்கள் உருவாக்கப் பட்டு வருகின்றன. இந்த ஒளியைத் தடுக்கும் அமைப்பு (Light Shield) பூரணமாக விண்ணுக்குச் சென்ற பின்பே விரியவுள்ளது. முற்றாக விரிந்த பின் இந்த மலர் வடிவத்தின் விட்டம் 100 அடிகளாக இருக்கும் என்பது ஆச்சரியமே..

இந்த ஆரிகமி தொழிநுட்பம் குறித்த வீடியோ கீழே :

 

ஆரிகமி தொழிநுட்பம் குறித்த தகவல்களுடன் கூடிய நாசாவின் இணைப்பு : https://www.jpl.nasa.gov/edu/learn/project/space-origami-make-your-own-starshade/

தொலை தூர நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி ஈர்ப்பினால் வளைக்கப் பட்டு வருவதை அவதானிப்பதன் மூலம் Exoplanets இனது இருப்பை கண்டுகொள்ளும் விதத்தில் WFIRST செய்மதியும், குறித்த Exoplanets இன் நட்சத்திரங்களது (host star) ஒளியைப் பூரணமாகத் தடுப்பதன் மூலம் வானியலாளர்களுக்கு அக்கிரகங்கள் குறித்த நேரடிப் பார்வையை Starshade செய்மதியும் வானியலாளர்களுக்கு வழங்கவுள்ளன..

அடுத்த தொடரில், எவ்வாறு பூமியின் சுற்று வட்டப் பாதைகளில் உள்ள செய்மதிகள் காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கின்றன என்பது குறித்தும், ஒரு நட்சத்திரத்தின் ஒளி அல்லது நிறமாலையில் (Spectrum) இலிருந்து எவ்வாறு உயிர்வாழ்க்கைக்கான தடயங்கள் தேடப் படுகின்றன என்பது குறித்தும், நாசாவின் New Worlds Mission என்ற செயற்திட்டம் எதிர்கொள்ளும் மிகக் கடினமான சவால்கள் மற்றும் அவை எதனால் ஏற்படுகின்றன என்பது குறித்தும் பார்ப்போம்..

நன்றி, தகவல் - நேஷனல் ஜியோகிராபிக் சஞ்சிகை, விக்கிபீடியா, நாசா

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction