free website hit counter

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் - 11 (We are Not Alone - Part 11) - மீள்பதிவு

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

மனித நாகரிக வராலாற்றில் அவனது புதிய இடங்களுக்கான தேடலும், அடைதலும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு படி முன்னேறியே வருகின்றது. ஆப்பிரிக்க கண்டத்துக்கு வெளியே பயணித்தது, சமுத்திரங்களைக் கடந்தது, அமெரிக்கா போன்ற தேசங்களைக் கண்டு பிடித்து குடியேறியது, மற்றும் பூமியின் துணைக் கோளான நிலவில் கால் பதித்தது என்பவையே அப்படிகளாகும்.

இதில் அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவில் கால் பதித்ததில் இருந்து தான் நாம் வேறு கிரகங்கள், வால் வெள்ளிகள் மற்றும் நீண்ட தூர விண்வெளிப் பயணங்களுக்கான இலக்குகளை நிர்ணயித்து அவற்றில் வெற்றியும் கண்டு வருகின்றோம். ஆனால் இப்போது இருக்கும் ராக்கெட்டு உந்துவிசை (Rocket Propulsion) தொழிநுட்பம் மூலம் எமக்கு அருகே இருக்கும் நட்சத்திரத் தொகுதியான அல்பா செண்டூரிக்கு பயணிப்பதானால் அதற்கு 10 இலிருந்து 100 ஆயிரம் வருடங்கள் வரை எமக்குத் தேவைப் படும். இதற்கான மாற்று தான் லேசர் கற்றைகள் மூலம் உந்தப் படும் Starshot செயற்திட்டத்தின் விண்கலங்கள் ஆகும்.

அல்பா செண்டூரி நட்சத்திரத் தொகுதியிலுள்ள Proxima b என்ற பூமிக்கு ஒப்பான கிரகத்தை நோக்கி செலுத்தப் படவுள்ள இந்த ஒவ்வொரு விண்கலமும் Nanocraft அல்லது StarChip உம் தபால் முத்திரை அளவே இருக்கும். ஆனால் இதில் கமெராக்கள், உந்து கருவிகள், நேவிகேஷன் மற்றும் தகவல் தொடர்பு கருவிகள் என அனைத்தும் கட்டமைக்கப் பட்டிருக்கும். விண்வெளியில் இது எரிபொருளுக்குப் பதிலாக லேசர் கற்றைகளால் உந்தப் படும். இந்த உந்தத்தைப் பெறுவதற்காக ஒவ்வொரு Nanocraft இலும் 1 மீட்டர் விட்டமுடையை மிக மிக மெல்லிய லேசர் பாய்மரம் (Laser sail) பொருத்தப் பட்டிருக்கும்.

சுமார் 100 பில்லியன் வாட் கொண்ட லேசர் கற்றைகள் பூமியின் தரையில் இருந்து இந்த நேனோகிராஃப்ட்கள் மீது செலுத்தப் படும். இதன் மூலம் ஒளியின் வேகத்தில் சுமார் 20% வீத வேகத்துடன் இந்த நேனோகிராப்ட்டுகள் 4 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் Proxima b இனை, 20 ஆண்டுகளில் சென்றடைந்து விடும். அங்கு சென்றடைந்த பின் அக்கிரகங்களின் சுற்றுச் சூழலைப் படம் பிடித்து லேசர் கதிர் ஊடாகவே பூமிக்கு இந்த நேனோகிராஃப்ட் அனுப்பும் புகைப் படங்கள் 4 ஆண்டுகளில் எம்மை வந்தடைந்து விடும்.

ஒளியின் வேகத்தில் மிகச் சிறியளவு வேகத்தில் பயணித்தாலே விண்வெளியில் இந்த நேனோகிராப்ட்டுகளின் பயணம் மிகவும் சவால் மிக்கதாகும். ஒரு சிறிய விண்வெளித் தூசு இதில் மோதினாலே பெரும் சேதம் ஏற்படும். ஆனால் எமது விண்வெளி பெரும்பாலும் 90% வீதம் வெற்றிடம் என்பதால் இதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்றே கருதப் படுகின்றது. இந்த செயற்திட்டம் மிகவும் சிக்கலானது என்பதுடன் இதற்கான செலவு பல பில்லியன் டாலர்கள் அளவில் இருக்கும் என்பதாலும் இப்போதைக்கு இதனை மேற்கொள்ளும் திட்டம் நாசாவுக்கு இல்லை. ஆனால் இன்னும் சில தசாப்தங்களில் இது தயாராகி விடும் என்று கூறப்படுகின்றது.

சுமார் 25 டிரில்லியன் மைல்கள் அல்லது 4.37 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஆல்பா செண்டூரி நட்சத்திரத் தொகுதி தான் பூமிக்கு மிக அருகே இருக்கும் இன்னொரு நட்சத்திரத் தொகுதியாகும். அதனால் தான் இதனைப் பயண இலக்காக எடுத்துள்ளனர். இந்த நட்சத்திரத் தொகுதி 3 நட்சத்திரங்களால் ஆனது. இதில் ப்ரொக்ஸிமா செண்டூரி என்ற நட்சத்திரம் தான் பூமிக்கு மிக அருகே 4.24 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. ஆனால் ஏனைய இரு A மற்றும் B என்று குறிப்பிடப் படும் நட்சத்திரங்கள் எமது சூரியனைப் போன்றவை. இவை ஒன்றை இன்னொன்று 80 வருடங்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றன. மேலும் இவ்விரு நட்சத்திரங்களும் மனிதர்களுக்கு விஞ்ஞான ரீதியாக மிகவும் முக்கியத்துவமானவை ஆகும்.

இதில் ஆல்பா செண்டூரி B நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகமொன்று பாறைகளால் ஆனது என்றும் பூமிக்கு இணையான கூறுகளைக் கொண்டிருக்கும் என்று 2012 ஆமாண்டு விஞ்ஞானிகளால் அறிவிக்கப் பட்டது. ஆனால் அதற்கான ஆதாரத்தைப் பெற முடியவில்லை. நீங்கள் பூமியின் தென்னரைக் கோளத்தில் வசிப்பவர் என்றால் தொலைக் காட்டி இன்றியே நீல வண்ணத்தில் ஒளிக்கும் ஆல்பா செண்டூரி நட்சத்திரத்தை தென்சிலுவை நட்சத்திரத் தொகுதிக்கு அடுத்ததாக வெறும் கண்ணால் வானில் பார்க்க முடியும்.

செண்டாரஸ் எண்ற நட்சத்திரத் தொகுதியைச் சேர்ந்த இந்த ஆல்பா செண்டூரி ஆனது எமது வானில் தெரியும் 3 ஆவது அதிக பிரகாசம் மிக்க நட்சத்திரமாகும். பூமியின் வடவரைக் கோளத்தில் வசிப்பவர்களுக்கு இந்த ஆல்பா செண்டூரி நட்சத்திரமானது அடிவானம் வரை தோன்றாது என்ற காரணத்தால் இதனைப் பார்ப்பது மிக அரிதாகும். இந்நிலையில் இந்த நட்சத்திரத் தொகுதி நோக்கி செலுத்தப் படக் கூடிய ஸ்டார்ஷொட் திட்டத்தின் நேனோகிராஃப்ட்கள் தாம் செல்லும் பாதையை ஒவ்வொரு மணித்தியாலமும் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரத்துக்கு சமமான தூரத்தை சரி செய்ய வேண்டி இருக்கும் என்றும் இதற்கு தேவையான அதிவேக மேப்பிங்கை செய்யக் கூடிய வில்லைகள் அதில் பொருத்தப் பட்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

ஆல்பா செண்டூரியை நெருங்க நெருங்க இந்த நேனோகிராஃப்ட்கள் எடுக்கும் துல்லியமான புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் நாம் பெற 4 வருடங்களுக்கும் அதிக காலம் எடுக்கும். ஏனெனில் ஒளியை விட வேகமாக வெற்றிடத்தில் எதுவும் பயணிக்காது என்பதனால் ஆகும். முன்னதாக இந்த ஸ்டார்ஷொட் திட்டத்தை முதலில் மும்மொழிந்த விஞ்ஞானியான ரோபெர்ட் ஃபோர்வார்டு என்பவர், பூமியின் வளி மண்டலம் லேசர் கதிரின் வீரியத்தைக் குறைத்து விடும் என்பதால் விண்வெளியில் நிறுவப் படக் கூடிய ஒரு லேசர் கற்றை கருவி மூலம் நேனோகிராஃப்ட்களை இயக்குவது குறித்தே தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

ஆனால் மிக மிக அதிகூடிய விலை மதிப்பு மிக்கதாக இந்த செயற்திட்டம் இருப்பதாலும், 100 பில்லியன் வாட் கொண்ட கொண்ட லேசர் கருவியை பூமியின் வளிமண்டலத்துக்கு கொண்டு செல்லுதல் அரசியல் அடிப்படையில் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் என்பதாலும் இந்த மும்மொழிவு ஏற்கப் படவில்லை. மாறாக பூமியின் காற்று மண்டலம் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளைக் குறைக்கக் கூடிய ஆப்டிக்கல் கருவி மூலம் பூமியில் உயரமான, வெதுவெதுப்பான சிலியில் உள்ள அட்டகாமா பாலை வனம் போன்ற இடங்களில் இதை நிறுவ இப்போது திட்டமிடப் பட்டு வருகின்றது.

இந்தப் புதிய வகை லேசர் உந்து விசை நேனோகிராப்ட் தொழிநுட்பம் வெற்றியடைந்தால், நிச்சயம் வருங்காலத்தில் பயனுள்ள பல விண்வெளிப் பயணங்களுக்கு இது வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றது. முக்கியமாக மனிதனின் கவனத்தை ஈர்த்து வரும் சனிக் கிரகத்தின் என்செலடுஸ் என்ற துணைக் கோள், புளூட்டோ போன்ற கிரகங்களுக்கு 1 அல்லது 3 நாட்களுக்குள் சென்றடையக் கூடிய அதி விரைவான விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்பது ஆச்சரியம் தானே!

1977 ஆமாண்டு ஏவப்பட்ட வொயேஜர் விண்கலம் 35 வருடங்களுக்குப் பின் புளூட்டோவைக் கடந்து சூரிய குடும்பத்துக்கு அப்பாலுள்ள விண்வெளியை அடைந்தது. இது பயணிக்கும் வேகத்திலேயே தொடர்ந்து பயணித்தால் ஆல்பா செண்டூரி நட்சத்திரத் தொகுதியை அடைய
75 000 ஆண்டுகள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலமாக வானியலாளர்களின் SETI என்ற வேற்றுக் கிரக உயிரினங்களைக் கண்டறிவதற்னாக ஆராய்ச்சியானது உலகில் சீனா, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் சிலி போண்ற பல இடங்களில் அமைக்கப் பட்டு வரும் மிகப் பெரும் ரேடியோ மற்றும் அகச்சிவப்புக் கதிர் அல்லது ஆப்டிக்கல் தொலைக் காட்டிகளது ஆய்வை ஒன்றிணைத்து இந்த ஸ்டார்ஷொட் செயற்திட்டத்தின் இலக்குகளை நிர்ணயிப்பதற்கு முயன்று வருகின்றது.

கடந்த 60 வருடங்களாக நாம் அறிவார்ந்த வேற்றுக் கிரக உயிரினங்கள் (Aliens) அழைப்புக்காக காத்திருந்தோம். ஆனால் இன்று அதற்கான அவசியமில்லை. ஏனெனில் நாம் இப்போது கவனம் செலுத்துவது இவற்றின் இருப்புக்கான அறிகுறிகளை அறிவது தொடர்பிலேயே. ஏனெனில் அறிவார்ந்த உயிரினங்கள் மில்லியன் கணக்கான ஒளியாண்டுகள் தொலைவில் பரிணாமம் அடைந்து வந்தால் எமது தலைமுறையில் அவற்றுடன் தொடர்பு ஏற்படுத்துவது சாத்தியம் மிகக் குறைவே ஆகும்.

'ஒரு வகையில் நாமும் த்ரிலோபைட்ஸ் எனப்படும் பரிணாமத்தின் முதல் உயிரி போன்றவர்கள் தான். நாம் தேடிக் கொண்டிருப்பதும் இன்னும் மேலதிக த்ரிலோபைட்டுக்களைத் தான்..!' என்று கூறுகின்றார் SETI செயற்திட்டத்தின் மூத்த வானியலாளர் செத் சொஷ்டாக். மேலும் எமது சொந்த நடத்தை மூலம் தெரிய வரும் விடயம் என்னவென்றால், விண்வெளியில் தமது இனத்தின் அழிவுக்குத் தமது சூழலைப் பாதிக்கும் தொழிநுட்பங்கள் மூலம் தாமே வழிவகுத்த பல ஏலியன் குடியேற்றங்களும் இருந்திருக்கும் என்று கூறும் சாரா சீகர், எமது விண்வெளியும், காலமும் மிக மிகப் பிரம்மாண்டமானவை. சிலவேளை எமது மிகச் சக்தி வாய்ந்த கணணிகளாலும், தொலைக் காட்டிகளாலும் கூட ஒரு வேற்றுக் கிரக அறிவார்ந்த உயிரியை (Alien Intelligence) அறிய முடியாது போகலாம்.

வருங்காலம் நமக்கு என்ன பதில் வைத்திருக்கின்றது என இப்போது கூற முடியாது..! பொறுத்திருந்து பார்ப்போம் என்கின்றார் சாரா சீகர்.

முற்றும்...

நன்றி, தகவல் : நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிகை, நாசா, கூகுள்

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

- விரைவில், அணுக்கரு - அறிவுக்குப் புலப்படும் சின்னஞ்சிறு உலகம்! - 4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடரை எதிர்பாருங்கள்..

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction