free website hit counter

ஜப்பானின் பிரமாண்ட அனிமேஷன் திரைப்படம் முதல், அமெரிக்க low-budget ஹிட்ஸ் வரை !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லொகார்னோ திரைப்பட விழாவின் நேற்றைய திரையிடல் காட்சிகளில் « The Money Has Four Legs » எனும் மியன்மார் திரைப்படத்தை Open Door பிரிவில் காணக்கிடைத்தது.

பணத்திற்கு நான்கு கால்கள் 

Open Door பிரிவு, தெற்காசிய, தென் கிழக்காசிய மற்றும் மொங்கோலிய திரைப்படங்களுக்கான விசேட காட்சிப் பிரிவாகும். இந்தப் படத்தை காண்பதற்கு தீர்மானித்ததற்கு காரணம், படத்தின் தயாரிப்பாளரான Ma Aeint தற்சமயம் சிறையில் இருக்கிறார். இதன் இயக்குனர் Maung Sun அதிக கெடுபிடிகளின் மத்தியில் சுவிற்சர்லாந்துக்கு வந்தவர். 

இராணுவ ஆட்சிக்குள் சமீபத்தில் புகுந்துகொண்ட மியன்மாரில், சினிமாவுக்காக கருத்துச் சுதந்திர தடைகள், அதன் எழுத்துருவாக்கத்திலேயே தொடங்கிவிடுகின்றன. இந்த திரைப்படம் அத்தகைய சென்ஸர் குளறுபடிகளை காண்பிக்கிறது. அதோடு சினிமா தயாரிப்பு, அதன் தயாரிப்பாளர்கள் யார், அவர்களது அந்தரங்க வாழ்க்கை எப்படிப்படது. எந்தளவு பணம் அனைத்திலும் விளையாடுகிறது என சொல்லும் திரைகக்தை. 

மெலிதான நகைச்சுவையை கொண்ட இத்திரைப்படம் முடிவடையும் போது ஒரு இளம் மியன்மார் இயக்குனர் தனது படத்தை செய்து முடிக்க எந்தளவு பண மிரட்டலில் தவறாக ஈடுபட வேண்டி உள்ளது, அதற்கான கர்ம வினைப்பயன் அவருக்கே எப்படி ஆப்பு வைக்கிறது எனும் வாழ்வியல் தர்க்கஙக்ளுடன் 100 வருட மியன்மார் சினிமா வரலாற்றையும் கொண்டாடும் விதமாக முடிவடைகிறது. 25 வது பூசன் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் பெரும்பாலான திரைப்படக் கலைஞர்கள் லொகார்னோ Open Door அகடமி பயிற்சிப் பட்டறைகளில் சந்தித்துக் கொண்டவர்கள். நிச்சயம் ஐரோப்பாவுக்கு மியன்மாரிலிருந்து ஒரு உற்சாக புதுவரவு இந்த திரைப்படம். 

நிஜ மனிதர்கள் 

இயக்குனர்களின் முதலாவது, இரண்டாவது முழுநீளத் திரைப்படங்களுக்காக ஒதுக்கப்பட்ட போட்டிப் பிரிவான Concorso Cineasti del presente இல் Kit Zauhar இன் Actual People திரைப்படம் காணக் கிடைத்தது.

இதுவரை லொகார்னோ திரைப்படங்களில் மிகத் திருப்தியளிக்கக் கூடிய ஒரு புதுவரவு சினிமா இது.  அமெரிக்க Independant சினிமாவின் புதிய முயற்சி. வெறும் 10’000 USD டாலர்களிலும், சில வார படப்பிடிப்பிலும் தனது குடும்பத்தாரையும், நண்பர்களையும் நடிகர்களாக கொண்டு இயக்கி, நடித்து, படத்தை முடித்திருக்கிறார் Kit Zauhar. இவர் ஆசிய-அமெரிக்க இளவயது பெண்.  படத்தின் திரைக்கதை இது தான். 22 வயதில், Riley எனும் ஆசிய-அமெரிக்க மாணவி நியூயோர்க்கில் பட்டப்படிப்பு படித்து வருகிறாள்.

ஆர்வமும், கவனமும் இல்லாததால்  பட்டப்படிப்பை நிறைவு செயய் முடியாது போகிறது. மூன்றுவருடமாக பழகி வந்த காதலன் கைவிரித்துச் செல்ல திடீர் பிரிவு, தன்னை எந்த ஒரு ஆணுக்கும் பிடிக்காதோ என்ற ஏக்கத்தினால், இரவு நண்பர்களின் வீட்டு விருந்துபச்சாரங்களுக்கு தேடிச் சென்று தோன்றும் ஆண்களுடன் எல்லாம் பழகத் தொடங்கும் பெண், பெற்றோருக்கு தெரியாமல் அவள் பாதையையே பின்பற்றி குடிக்கத் தொடங்கும் தங்கை, கல்லூரி ஆசிரியர்களின் எச்சரிக்கை என படம் முழுவதும் நிஜ மனிதர்களும், நிஜத் தருணங்களும். இந்தக்கால வாலிபர்களின் மேற்குலக வாழ்க்கையை அப்படியே உரித்துக் காட்டியிருக்கும் திரைப்படம். 

ஆவணத் திரைப்பட பாணியில் கமெரா கதாபாத்திரங்களை சுற்றியே நகர்ந்து கொண்டிருக்க எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாது, கதாபாத்திரங்கள் அனைத்துமே நிஜ மனிதர்களை அப்படியே பிரதிபலிக்கின்றன. 

எதிலும் ஆர்வம், ஆனால் ஒட்டமுடியாத ஏக்கம், என அனைத்தையும் முயற்சிக்கும் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார் Kit Zauhar. தனது நிஜத் தங்கை, நிஜக் கல்லூரி பேராசிரியர்கள், நிஜ நண்பர்கள், ஆனால் தான் ஏற்ற கதாபாத்திரம் மாத்திரம் புனைவுக் கதாபாத்திரம். நிச்சயம் அடுத்தடுத்த வருடங்களுக்கு அதிகம் பேசப்படும் திரைப்பட விழா காவியமாக இது மாறும். 

Belle 

பியாற்சே கிராண்டே திறந்த வெளி முற்றத்தில் நேற்று ஜப்பானிய மங்கா அனிமேஷன் திரைப்படமான Belle காணக்கிடைத்தது.

ஜப்பானின் புழக்பெற்ற சிறுவர்களுக்கான அனிமேஷன் இயக்குனர் Mamoru Hosoda இன் புதிய திரைப்படம் இது.  லொகார்வோவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, லொகார்னோவின் சிறுவர் விருதையும் அவரே பெற்றுக் கொண்டார். Suzu எனும் 17 வயது இளம் கல்லூரிப் பெண் தனது தாயை ஒரு விபத்தில் இழந்துவிட, தந்தையிடமிருந்தும் அவள் விலகிக் கொள்கிறாள்.

தன் பள்ளி வகுப்பில் வெட்கத்துடனும், தாழ்வு மனப்பான்மையுடனும் இருக்கும் பெண் அவள். உலகமே வெறுத்துப் போன நிலையில் U எனும் Cyberspace இணைய உலகை தற்செயலாக கைத்தொலைபேசி மூலம் காண்கிறாள். கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் யூசர்களுடன் உருவாக்கப்பட்ட இந்த இணைய உலகத்தில் அவள் Belle எனும் அவதாரத்தில் உருவெடுத்து பாடகியாகி அனைவரது கவனத்தையும் பெறுகிறாள். 

ஆனால் நிஜ  உலகில் யார் கண்களிலும் படாமல் தொடர்ந்து விலகியிருக்கவே முனைகிறாள். கடைசியில் எப்படி சைபர் உலகிலும் சரி தனது நிஜ உலகிலும் சரி தனது நிஜ அடையாளம் என்ன, தனது திறமை என்ன, அது எப்படி தன்னைப் போன்று தாயின்றி தவிக்கும் இன்னொரு குடும்பத்தை ஆற்றுதல் படுத்துகிறது என்பதே படத்தின் திரைக்கதை. 

பியாற்சே கிராண்டே திறந்த வெளிமுற்றம் முழுவதும் வர்ண அனிமேஷன் கோடுகளால் அலங்கரிக்க, நிஜ வான் நட்சத்திரங்களுக்கு நடுவே டிஜிட்டல் அனிமேஷன் நட்சத்திரமாக இந்த திரைப்படம் திரையில் ஜொலித்தது.  தற்காலிக பதின்ம வயதினரின் இணைய உலகம் எப்படிப்பட்டது, அதில் அவர்கள் வாழும் வாழ்க்கை என்ன, எதிர்கொள்ளும் கேலிகள் என்ன, அதில் இருக்கும் போட்டி, பொறாமை, வஞ்சகம், அப்பாவித் தனம், என அனைத்தையும் பிரதிபலிக்கிறது Belle. சிறுவர்களுக்கான திரைப்படம் என்ற போதும், படம் முழுவதும் நாற்காலியை விட்டு நகர முடியாத அளவு திரைக்கதை கட்டிப் போட்டு விடுகிறது.   

Wolf children, Mirai படங்கள் மூலம் பிரபலமாகி ஜப்பானிய உணர்வுபூர்வமான அனிமேஷன் உலகின் மாஸ்டர் என பேசப்படும் Mamoru Hosda வின் சினிமா பயணத்தில் மிக உயரத்தில் இருந்த இலட்சியத் திரைப்படம் இது. இதை செய்யவே இவ்வளவு நாள் காத்திருந்தேன் என அவரே சொல்கிறார். 

ஃபேண்டசி உலகில் போதைப் பொருட்கள் அனைத்துமே Gaming Avatars ஆக உருவாகிக் கொள்கின்றன. நிஜ யதார்த்த உலகிலிருந்து விடுபடுவது போதைப் பொருளினதும் சரி, Gaming Avatars இனதும் நோக்கம். ஆனால் Hosda இந்த இணைய உலகின் நேர்மறையான பயன்களையும் ஞாபகப்படுத்துகிறார். ஒருவரின் ஆழமான தயக்கபூர்வமான நம்பிக்கை அடையாளங்களை கொண்டுவர அவை உதவலாம் என்பதே அவர் வாதம். 

Belle : பியாற்சே கிராண்டே பெரு முற்றத்திற்கு ஒரு துணிவான முயற்சி 

- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்னோவிலிருந்து ஸாரா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula