free website hit counter

மாஸ் ஹீரோக்களுக்கு எச்சரிக்கை மணி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இது கொரோனா பற்றியதோ அல்லது தியேட்டர் மூடல் பற்றியதோ அல்ல.

முக்கியமான முன் குறிப்பு: இதில் கூறப்பட்டிருக்கும் எதுவும் தனிப்பட்ட கருத்துகளின் தொகுப்பு அல்ல! திரையுலகின் பல தரப்பினரின் தவிப்பு!

நம் தமிழ் சினிமாவின் தயாரிப்புச் செலவு, விளம்பரச் செலவு மற்றும் வெளியீட்டுச் செலவு ஆகியவற்றைப் பற்றி மணிக்கணக்காக அலசுகிறார்கள். பல தயாரிப்பாளர்களிடம் தனிப்பட்ட முறையில் விபரங்கள் பேசும் வாய்ப்புக் கிடைக்கிறது. போக, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என்று பலருடனும் கலந்து பேசும் சந்தர்ப்பம் வாய்க்கிறது.
சில புரடக்சன் மேனேஜர்கள், ஏஜெண்டுகள் ஆகியோரும் கருத்துக்களை விதைத்திருக்கிறார்கள். அனைவரும் ஒட்டு மொத்தமாகச் சொல்வது;
"தமிழில் தற்போதிருக்கும் எந்த நடிகரை வைத்துப் படம் எடுத்தாலும் தயாரிப்பாளருக்கு லாபமில்லை" என்பதுதான். ஆங்காங்கே 'மாநாடு' போல ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். விதிவிலக்குகள் எப்போதும் விதிகள் ஆகாது. பொதுவாக 2-5 கோடியைத் தாண்டிப் படம் தயாரிக்கும் பெரும்பாலானவர்கள் சொந்தக் காசில் எடுப்பதில்லை. எல்லாம் கடன். எளிதாகக் கடன் கிடைப்பதால் நடிகர்களின் சம்பளம் பற்றி அக்கறையில்லாமல் அதிகரிக்கப்படுகிறது. நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் கிடைத்தவரை லாபம் என்ற மன நிலைக்கு வருவதற்கு தயாரிப்பாளர்கள் முக்கியக் காரணம்.

எடுக்கப்பட்ட படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவும்போது நின்று நிதானமாக யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இப்போது கொஞ்சம் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த யோசனையால் பெரிய அளவு பாதிப்பிற்குள்ளாகப் போவது 5 கோடி வரை சம்பளம் கேட்கும் நடிகர்கள்.

1. அஜீத் - போனி கபூர், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் - தெலுங்கு தயாரிப்பாளர்கள் என்று உச்ச நட்சத்திரங்கள் பழ மரங்கள் தேடிச் செல்லத் தொடங்கி விட்டார்கள்.

2. சமீப காலங்களில் தெலுங்கு நடிகர்கள் தங்களின் படங்களின் விளம்பரங்களுக்காக மெனக்கெட்டது நம் நடிகர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய பாடம்.
மாறாக, நம் தமிழ் நடிகர்கள், நடிகைகள் புரமோசனுக்கு வருவதில்லை என்பதைப் பெருமையாக வேறு பேசுகிறார்கள். விளைய வைத்த பயிரை அறுவடை செய்யாமல் விட்டால் என்ன நடக்குமோ அது இப்போது நடக்கத் தொடங்கியுள்ளது.

3. 'புஷ்பா' படம் தமிழ்நாட்டில் மட்டும் 'டாக்டர்' படத்தின் வசூலைத் தொட்டு விட்டதாக ஒரு விநியோகஸ்தர் கூறினார். அது எந்த அளவு சரியான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், அல்லு அர்ஜுன் நடிக்கும் மற்ற படங்களுக்கு நம் மாநிலத்தில் இப்போதே பெரிய வரவேற்பு இருப்பதாகவும் கூறினார்.

4. ஆர்ஆர்ஆர் படத்தை வெளியிட அத்தனை தியேட்டர்களும் தயாராக இருந்தன. இயக்குநர் ராஜமௌலி ஒரு காரணமென்றால், அவர்கள் அசராமல் செய்த பப்ளிசிட்டி. அதேபோல பிரபாஸ் படம்!

5. ஐம்பது லட்சத்திலிருந்து 4 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் நடிகர்கள் 15 பேருக்குமேல் இருப்பார்கள்.
அவர்கள் நடித்து வெளியான கடைசி மூன்று படங்களின் வியாபாரம் லாபமா அல்லது நஷ்டமா? பெரும்பாலும் நஷ்டம் என்பது நமக்குக் கிடைத்த தகவல். நஷ்டம் என்றால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் அக்கறையோடு தயாரிப்பாளர்களிடம் பேசினார்களா? நஷ்டத்திற்கு என்ன காரணம் என்பதைக் கேட்டார்களா? ஈடுகட்ட உதவியாக வாக்குறுதி கொடுத்தார்களா?

இப்போதைய தெலுங்கு நடிகர்களான
அல்லு அர்ஜுன்
ராம் சரண்
ஜூனியர் என்டிஆர்
மகேஸ் பாபு
பிரபாஸ்
ரவி தேஜா
விஜய் தேவரகொண்டா
நானி
இன்னும் சிலர் தமிழ் சினிமா மார்க்கெட்டைக் குறி வைத்து இறங்கியிருக்கிறார்கள்.

இது நமக்கு ஆச்சர்யம் அல்ல. ஆனால்... நம் தயாரிப்பாளர்கள் இப்போது தெலுங்கில் கீழ் மட்டத்திலிருக்கும் ஹீரோக்களைத் தொடர்பு கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். தெலுங்கில் 5-8 கோடி வரை வியாபாரம் உள்ள நடிகர்களின் சம்பளம் ஒரு கோடிக்குள் என்பது ஆச்சர்யமான செய்தி. கொஞ்சம் மிகைப்படுத்தியும் சம்பளத்தைக் குறைவாகக் கூறியிருக்கலாம்.
ஆனால், அவர்களின் முக்கியக் குறிக்கோள் தமிழில் அறிமுகமாவது. அதற்காக எந்த அளவும் இறங்கிப் போகத் தயாராக இருக்கிறார்கள்.
போட்ட காசு எளிதாகத் தெலுங்கு வியாபாரத்தில் கிடைத்துவிடும் பட்சத்தில் தமிழ் வியாபாரம் தயாரிப்பாளருக்குப் போனஸ்!

நம் தமிழ் நடிகர்கள்; - ஒரு படம் நன்றாக ஓடியதும், சந்திக்கவே முடியாத அளவு இரும்புத் திரையைப் போட்டுக் கொள்வதும்,- தகுதிக்கு மீறி சம்பளம் கேட்பதும், - புரமோசனுக்கு வர மாட்டேன் என்று பிகு பண்ணுவதும், - படத்தின் வசூல் பற்றித் தவறான கருத்துக்களால் மாயையில் இருப்பதும், - பணம் போடுபவரை மதிக்காமல் அலைய விடுவதும், - தயாரிப்புச் செலவு அதிகமாவதற்கு தான் காரணமாவதும்,

- ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வராமல் நஷ்டப்படுத்துவதும், - தயாரிப்பாளர் வட்டி கட்டிச் செத்தாலும் பரவாயில்லை என்று முழு பணத்தையும் ஆரம்பத்திலேயே டிமாண்ட் செய்து வாங்குவதும், - அட்வான்ஸ் வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுக்காமல் வருடக்கணக்கில் அலைக்கழிப்பதும் நடக்கிறது.

தற்போது காலம் மாறுகிறது. நடிகர்கள் சுய பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தமிழின் பெரிய நடிகர்களின் படங்களைத் தயாரிக்க தெலுங்கு தயாரிப்பாளர்களும், தமிழ்நாட்டுத் தயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்க தெலுங்கு நடிகர்களும் களம் இறங்கியிருக்கிறார்கள்.

இந்த எச்சரிக்கை மணியைக் கவனிக்க வேண்டியது தமிழ் நடிகர்களுக்கு காலத்தின் கட்டாயம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula