free website hit counter

உலக அளவில் ட்ரெண்ட் ஆனது 'பீஸ்ட்’ பட கிளைமாக்ஸ் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்தமாதம் வெளியான படம் 'பீஸ்ட்'. முதலில் திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது நெட்பிளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களிலும் வெளியாகியுள்ளது.

ஓடிடியில் இந்தி, தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 'பீஸ்ட்' டப் செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து இத்திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று 'பீஸ்ட்' படம் உலக அளவில் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. ஓய்வுப்பெற்ற இந்திய விமானப் படை விமானி சிவராமன் சஜ்ஜன் என்பவர் போட்ட ஒரு ‘ட்வீட்’தான் இந்த டிரெண்டிங்குக்கு காரணம். 'பீஸ்ட்' திரைப்படத்தில் 'ரா' உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ள விஜய், கிளைமாக்ஸில் இந்திய ராணுவத்துக்கே தெரியாமல் தன்னந்தனியாக பாகிஸ்தானுக்குள் ஜெட் விமானத்தில் சென்று தீவிரவாதிகளின் தலைவனை பிடித்து வருவார். அப்போது பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்தும் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து அவர் இலகுவாகத் தப்பித்து வருவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது

இந்தக் காட்சியை வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கேப்டன் சிவராமன் சஜ்ஜன், ‘இதில் எனக்கு ஏராளமான கேள்விகள் இருக்கின்றன...’எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் பதிவைதான் தற்போது நெட்டீசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். முதலில் இந்திய அளவில் டிரெண்டான இந்த ட்வீட், ஒருகட்டத்துக்கு மேலே சர்வதேச டிரெண்டாக மாறிப்போனது.

பொதுவாக, போர் விமானங்களை இயக்கும் விமானிகள், அவற்றின் அசுர வேகம் காரணமாக ஆக்சிஜன் மாஸ்க்கும், ஹெல்மெட்டும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஏனெனில் ஜெட் சண்டை விமானம் செல்லும் வேகத்தில் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். தவிர காற்றின் வேகத்திலும் ஜெட்டின் ஒலியிலும் காது சவ்வுகள் கிழிந்து விடும். இதன் காரணமாகவே ஆக்சிஜன் மாஸ்க்கையும், ஹெல்மெட்டையும் விமானிகள் அணிந்திருப்பார்கள். ஆனால், குறிப்பிட்ட காட்சியில் விஜய் ஆக்ஸிஜன் மாஸ்க், ஹெல்மெட்டை என இரண்டையுமே அணிந்திருக்க மாட்டார். நிஜத்தில் இது சாத்தியமே இல்லாதது.

இந்த லாஜிக் கொடுமைகள் போதாது என்று, எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்பித்து வரும் விஜய்யை பார்த்து, எதிரே மற்றொரு ஜெட்டில் வரும் பெண் விமானி சல்யூட் அடிப்பார். அதற்கு விஜய்யும் பதில் சல்யூட் அடிப்பார். சாதாரணமாக ஒரு ஜெட் விமானம் மணிக்கு 1,500 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அந்த வேகத்தில் செல்லும் போது எதிரே வரும் ஜெட் விமானம் உள்ளிட்ட எந்தவொரு விமானமும் மைக்ரோ வினாடிகளில் கடந்து சென்றுவிடும்.

அப்படி இருக்கும் போது, எதிரே வரும் விமானிக்கு சல்யூட் அடிப்பது எல்லாம் ரொம்ப ஓவர் என உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் நெட்டிசன்கள் இந்தக் காட்சியையும் பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர். ‘ஒரு திரைப்படத்தில் லாஜிக் மீறல் இருக்கலாம்; தவறில்லை. ஆனால் லாஜிக்கே இல்லாமல் இருப்பதுதான் தவறு’எனவும் நெட்டீசன்கள் காலாய்ப்பைத் தொடர்ந்து வருகிறார்கள். மேலும் பல வீடியோ மீம்ஸ்களையும் போட்டு பீஸ்ட் கிளைமேக்ஸ் காட்சியை கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யுடைய ரசிகர்கள் இதுபோன்ற கலாய்ப்புகளுக்கு மறு பதிவிட்டு அதில் ஹாலிவுட் நடிகர்கள் இதுபோன்ற காட்சிகளில் நடிக்கும்போது யாரும் லாஜிக் பார்ப்பதில்லை. தமிழ் நடிகர்கள் நடிக்கும் போது மட்டும் அவர்களது கண்களில் தெரிகிறதா? என்று விஜய்க்கு ஆதரவாக பதில் ட்விட்டுகளைப் போட்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction