தமிழ் சினிமாவில் கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனத்தைத் தொடங்கியவர் கே.இ. ஞானவேல் ராஜா. வெற்றிப் படங்களை மட்டுமே இவர் தயாரிப்பாளர். நல்ல கதை, பிஸ்னஸ் உள்ள நடிகர்களை மட்டுமே பயன்படுத்துவார்.
அதேபோல் புதுமுக இயக்குனர்கள் வேறு தயாரிப்பாளர்களை கொண்டு சிறந்த படத்தை எடுத்திருந்தால் அவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்கி தனது பேனரில் வெளியிட்டு பல மடங்கு லாபம் பார்ப்பார். இவர் மற்ற ஸ்டார் படங்களுக்கு பைனான்ஸ் செய்துவிட்டு, கறாராக வசூல் செய்வதில் கில்லாடி. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முக்கிய பொறுப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், பின்னர் அந்தப் பதவியால் தனக்கு தலைவலி என்று தெரிந்ததும் அதையும் ராஜினாமா செய்தவர்.
இவரது தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி 2019-ல் வெளியான படம் ‘மிஸ்டர் லோக்கல்’. ரூபாய் 35 கோடியில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் சிவகார்த்திகேயன் படங்களில் அவ்ரேஜ் வசூலைக் கொடுத்தது. அதாவது தமிழ்நாடு உள்நாட்டு திரையரங்க வசூல் மூலம் 55 கோடி ரூபாய் வசூல் செய்தது. சாட்டிலைட், ஓடிடி உள்ளிட்ட பிற டிஜிட்டல் உரிமைகள், வெளிநாட்டு உரிமை ஆகியவற்றின் மூலம் 17 கோடி வரை ஈட்டப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் படம் வெளியாகி 3 ஆண்டுகள் முடியப்போகும் நிலையில் நாயகன் சிவகார்த்திகேயனுக்குப் பேசப்பட்ட சம்பளத்தில் 4 கோடி ரூபாயை பாக்கி வைத்துள்ளதாக சிவகார்த்திகேயன் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திரையுலகில் பலரும் நன்மை செய்து பழக்கப்பட்டவர் சிவகார்த்திகேயன். யாரை எளிதில் எடுத்தெறிந்துவிடாதவர். முடிந்தவரை தன்னால் இயன்ற அனைத்து வழிகளிலும் உதவி வருவதை தனது வாழ்க்கை முறையாக கடைப்பிடித்து வருகிறார். ‘மிஸ்டர் லோக்கல்’ மூலம் நல்ல லாபம் பார்த்தும் சிவகார்த்திகேயனுக்கு சேரவேண்டிய பணத்தை தயாரிப்பாளர் கொடுக்காதது குறித்து கோலிவுட்டில் டாக் ஏற்பட காரணமாக ஆகியுள்ளது, தயாரிப்பாளர் அவர் தொடுத்துள்ள வழக்கு.
சிவகார்த்தியனுக்கு கொடுக்க வேண்டிய 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை கொடுக்கும் வரை, நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தடை விதிக்க கோரியுள்ளது அவருடைய தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு. இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட பதினைந்து கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த மனுவில் சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீட்டு உரிமைகளை உறுதி செய்யவும் தடை தேவை என சிவகார்த்திகேயன் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை