சமீபத்தில் சார்பட்டா பரம்பரை வெற்றிபெற்ற பின் நடிகர் பசுபதி ஒரு அரிய பேட்டி தந்திருந்தார்,
அவர் கூத்துப்பட்டறையில் கற்றலில் இருந்த 1984-1997 நீண்ட ஆண்டுகளில் தினமும் பயிற்சி முடிந்து கலந்துரையாடல் முடிந்து பேருந்து ஏற இரவு பத்து மணிக்கு மேலாகிவிடும், பொழிச்சலூர் செல்ல நேரடி பேருந்து கிடைக்காது, பல்லாவரம் வரை பேருந்தில் வந்து இறங்கி நான்கு கிலோமீட்டர் தெருவிளக்கில் கைக்கு கிடைத்த ஏதாவது ஒரு புத்தகத்தை படித்தபடி பீடி அடுத்தடுத்து வலித்தபடி நடந்து போய் கூடடைவேன் என்றார்,
அது அப்படியே மனதில் நின்றுவிட்டது, அவர் சுமார் 13 வருடகாலம் கூத்துப்பட்டறையில் இருந்திருக்கிறார், எத்தனை தவம், எத்தனை பொறுமை இருந்தால் இந்த ஒரு குறிப்பிட்ட இலக்கை வந்து அடைந்திருக்கிறார்,
இன்று கூட விருமாண்டி படத்தை கொத்தாளனுக்காக தனியாக அமர்ந்து பார்க்கலாம், கண்களை உருட்டி அத்தனை வித்தைகள் செய்திருக்கிறார், மும்பை எக்ஸ்பிரஸ் படத்திலும் அந்த குதிரையிடம் கடி வாங்கிய பிரத்யேக லெஃப்ட் ஹாண்ட் ட்ரைவ் கார் ஓட்டும் கடத்தல்காரர் சிதம்பரம் கதாபாத்திரத்தை தனித்துவமாக செய்தவர், வெயில் படத்தின் முருகேசன் கதாபாத்திரம்,
இயற்கை திரைப்படத்தின் ஃபெர்னான்டஸ் கதாபாத்திரம், இதற்கு தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா? படத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சர்க்கரை நோயாளி அண்ணாச்சி வேடம் , அசுரன் படத்தின் முருகேசன் கதாபாத்திரம், தூள் படத்தின் ரவுடி ஆதி கதாபாத்திரம் என தன் தனித்துவத்தை ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நிரூபித்தவர் பசுபதி,
பொழிச்சலூர் நடிகர் சந்தானத்தின் ஊரும் கூட! கடின உழைப்புக்கு குறுக்கு வழி மாற்றாகாது, உழைக்காமல் எதுவேனும் கிடைத்தால் நிலைக்காது என்பதையே விஜய் சேதுபதியின் இந்த பேட்டி காட்டியது.