பஞ்சாப்பில் சாஹிப்-அனந்தப்பூர் சுங்க சாவடி கட்டணம் இலவசம் என முதல்-மந்திரி அறிவித்து உள்ளார்.
பஞ்சாப்பில் கிராத்பூர் சாஹிப்-அனந்தப்பூர் சாஹிப்-நங்கல்-உனா சுங்க சாவடிக்கான கட்டணம் பொதுமக்களுக்கு இனி விதிக்கப்படாது என்றும் சுங்க சாவடி கட்டணம் இலவசம் என்றும் முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்து உள்ளார்.
இந்த இலவச அறிவிப்பை வெளியிட்டு பகவந்த் மான் பேசும்போது, சுங்க சாவடியை நிர்வாகம் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்ட நிறுவனம், உரிய விதிகளை கடைப்பிடிக்காமல் பல்வேறு தருணங்களில் அவற்றை காற்றில் பறக்க விட்டு விட்டது.
அதனால், அந்த சுங்க சாவடியை பராமரிக்க கோரி அந்நிறுவனத்திடம் இருந்து வருங்காலத்தில் வர கூடிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுவதற்கு, அரசு சகித்து கொண்டு இருக்காது. இதனால், நாள் ஒன்றுக்கு பொதுமக்களின் ரூ.10.12 லட்சம் பணம் சேமிக்கப்படும்.
அந்த நிறுவனம், 582 நாட்களுக்கு சுங்க சாவடி பராமரிப்பு பற்றி நீட்டித்து கோரியுள்ளது. அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. ஒப்பந்த விதிமீறல்களில் அந்நிறுவனம் பலமுறை ஈடுபட்டு உள்ளது. விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.