free website hit counter

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது.
இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. பிற்பகல் 3 மணியில் இருந்தே நிகழ்ச்சிகள் தொடங்கின. பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதும் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. சுமார் 900 கலைஞர்கள் பங்கேற்று இந்திய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான கலைஞர்கள் வந்திருந்து கலைத்திறனை வெளிப்படுத்தினர். இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் பியானோ வாசித்தார். ஒரே சமயத்தில் இரண்டு படங்களுக்கான இசையை அவர் வாசித்து அசத்தினார். பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை மணல் ஓவியத்தில் வரைந்து அனைவரையும் கவர்ந்தார் ஓவியர் சர்வம் படேல்.

விழாவில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் மோடி இன்று பிற்பகல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி ராணுவ விமானத்தில் புறப்பட்டார். மாலை 5 மணியளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருநது ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படைத் தளம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு ஸ்டேடியத்திற்கு காரில் வந்தடைந்தார். முதல்வர் போன்றே பிரதமரும் வேட்டி, சட்டை அணிந்து வந்தார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

பிரதமர் வந்ததும் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு விழா தொடங்கியது. விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வரவேற்புரையாற்றினார். அதன்பின்னர் பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார். நடிகர் கமல்ஹாசன் குரலில் தமிழ் கலாச்சாரம், தமிழர்களின் வரலாறு, பாரம்பரிய கலைகள், தமிழ் சினிமா ஆகியவற்றை பறைசாற்றும் நிகழ்த்து கலை நடைபெற்றது.

கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தலைவர்கள் உரையாற்றினர். அதன்பின்னர் 75 நகரங்களை கடந்து வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் தொடர்பான காட்சிப்படம் ஒளிபரப்பட்டது. அதன்பின்னர் விஸ்வநாதன் ஆனந்த், ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர் மு.கஸ்டாலினிடம் வழங்கினார். அவர், பிரதமர் மோடியிடம் வழங்கினார். அதன்பின்னர் ஒலிம்பியாட் ஜோதி பிரக்ஞானந்தாவிடம் வழங்கப்பட்டு, ஜோதி ஏற்றப்பட்டது. இதன்மூலம் போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், 187 நாட்டு செஸ் வீரர்கள் பங்கேற்றனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையொட்டி, நேரு ஸ்டேடியம் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula