தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. க்கள் 11 ஆண்டுகளாக சம்பளம் பெற்று வருவது, ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. சிலர், முறைகேடாக மக்கள் வரிப்பணத்தை வீணடித்து பென்ஷன், பிற சலுகைகளை பெற்று வந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சமூக செயற்பாட்டாளர் பி.பி. கபூர் என்பவர் கேள்வி எழுப்பி இருந்தார். தற்போது அதற்கு பதில்கள் வந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து, சமூக செயற்பாட்டாளர் பி.பி. கபூர் கூறியதாவது:
"கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய ஹரியானா சட்டப்பேரவை சபாநாயகர் சவுத்ரி சத்பிர் சிங் கடியான், கட்சி தாவிய 11 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்கம் செய்தார். இந்த 11 பேரில் 6 பேரை உச்சநீதிமன்றமும் தகுதி நீக்கமும் செய்தது. இருப்பினும் அவர்கள் அனைவரும் எம்.எல்.ஏ. க்களுக்கான சம்பளமும், இதர படிகளையும் பெற்று வருகின்றனர்.
2010ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி, கட்சி தாவியவர்களை எம்.எல்.ஏ. க்களாக தகுதி நீக்கம் செய்யும் வகையில் கட்சித் தாவல் தடை சட்டத்தை கொண்டு வந்தது. இருப்பினும் 2010ம் ஆண்டு முதல் இவர்கள் 11 பேரும் ஒவ்வொரு மாதமும் 51 ஆயிரத்து 800 ரூபாயை பென்ஷனாகவும், 10 ஆயிரம் ரூபாயை பயணப்படியாகவும் பெற்று வருகின்றனர். சட்டம் கொண்டு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்களே இதனை மீறியுள்ளனர். இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள் மட்டுமல்ல, அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்."
இவ்வாறு அவர் கூறினார்.