free website hit counter

மறு ஆய்வு பணிகள் முடியும்வரை தேசத்துரோக வழக்கு பதிவு செய்யக்கூடாது- உச்ச நீதிமன்றம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் 124ஏ சட்டப்பிரிவை பயன்படுத்தி அரசியல் காரணங்களுடன் தனிநபர்கள் அச்சுறுத்த படுவதாகவும், இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு,  பல்வேறு காலனித்துவ சட்டங்களை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்வது அல்லது மறு ஆய்வு செய்வது தொடர்பான முடிவு எடுக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என நேற்றைய விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், தற்போது நிலுவையில் இருக்கக்கூடிய தேசத்துரோக வழக்குகளையும் இடைப்பட்ட காலத்தில் பதிவு பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விவரங்களை விரிவாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

அதன்படி இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேச துரோக வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்த முடியாது என்றும், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி தேசத் துரோக வழக்குகளுக்கு தடை விதிப்பது சரியான அணுகுமுறையல்ல என்றும் மத்திய அரசு பதில் அளித்தது.

இதையடுத்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், தேசத் துரோக சட்டப்பிரிவு 124ஏ விதிகளை மறு ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு அனுமதி அளித்தது. தேசத் துரோக சட்டப்பிரிவை மறு ஆய்வு செய்யும்வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது, விசாரிக்கவும் கூடாது எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. நிலுவையில் உள்ள வழக்குகள், மேல்முறையீடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது. 

‘மறு ஆய்வு பணிகள் முடியும் வரை இந்தச் சட்ட விதியைப் பயன்படுத்தாமல் இருப்பதே பொருத்தமானதாக இருக்கும். அதுவரை இந்த சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்வதை மத்திய அரசும், மாநில அரசுகளும் தவிர்க்கும் என்று நம்புகிறோம்’ என தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction