இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான் இலட்சத்தீவுகளின் நிர்வாக தலைவரான ப்ரபுல் ஹடா படேல் தலைமையிலான நிர்வாகம் குறித்து பலமான எதிர்ப்புக்கள் கேரளத்தில் எழுந்துள்ளன.
அங்கு மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடைவிதிக்கவும், மது அருந்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கவும், எடுக்கப்படும் நடவடிக்கைகள் இலட்சத்தீவுகளில் சுற்றுலாத்துறையை மேற்படுத்த எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையிலும் சமூக எதிர்ப்பு தடுப்பு சட்டமும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்க மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது அவர்களின் படகுகளில் அரசு அதிகாரி ஒருவரும் பயணிப்பார் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இலட்சத்தீவுகளில் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் எனும் நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இலட்சத்தீவுகளுக்கு அருகில் உள்ள கேரள மாநிலத்தில் இந்த விவகாரம் பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. இது தொடர்பாக கேரளத் தொலைக்காட்சிகளில் நடைபெற்ற விவாதங்களில் ஒன்றில், இலட்சத்தீவுகளில் ஒன்றான ஷட்லட் தீவை சேர்ந்தவரும், கேரளாவில் வசிப்பவருமான பிரபல பெண் இயக்குனரும், நடிகையும், சமூகசெயற்பாட்டாளருமான ஆஷா சுல்தானா பங்கேற்ற போது, கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக (Bio Weapon) மத்திய அரசு பயன்படுத்துகிறது எனும் தொனியில் பேசியமை பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
இந் நிலையில் ஆஷா சுல்தானா மீது இலட்சத்தீவு போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கேரளாவிலும் ஆஷா சுல்தானா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில் ஆஷா சுல்தானா விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுவதாகச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.