சர்வதேச விமான சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ளதால் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் சர்வதேச விமான சேவை தொடங்கியது. இந்த வாரம் முழுக்க இந்தியாவில் சுமார் 3250 விமான சேவைகள் சர்வதேச அளவில் நடைபெற உள்ளது.
இதற்கிடையே சர்வதேச விமான சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ளதால் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுற்றுலாதுறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விசா இலவசமாக வழங்கப்படும். சுற்றுலா துறையை மீட்பு பாதையில் கொண்டு வரும் நோக்கில் விமான செயல்பாடுகள் மற்றும் விசா சலுகைகள் மீண்டும் தொடங்குவது குறித்து அனைத்து மாநில அரசுகள், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா மற்றும் பயண சேவை மையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலா துறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சுற்றுலா துறை மந்திரிகள், மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் மற்றும் சுற்றுலா துறை செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் ஏப்ரல் 12 மற்றும் 13-ந் திகதிகளில் நடைபெற உள்ளது.
170 நாடுகளில் இ-விசா நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இனி இந்திய தூதரகங்களுக்கு விசாவுக்காக செல்ல வேண்டியது இல்லை. இது நிரந்தரமான ஏற்பாடா என்பது குறித்து நிலைமைக்கு ஏற்ப பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.