சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது ஏராளமானவர்களுக்கு 2 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் பெயர்களை அடையாளம் காண ஆதார் எண் விவரங்களை சேகரிக்கும் பணியை வருகிற 1-ந்தேதி முதல் சென்னை மாநகராட்சியின் தேர்தல் துறை தொடங்க உள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்தும், ஆதார் விவரங்களை வழங்காதவர்களுக்கு பான்கார்டு, பாஸ்போர்ட் போன்ற 11 மாற்று ஆவணங்கள் குறித்தும் அதிகாரிகளுக்கு இந்த வாரம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதையடுத்து சென்னையில் 3750 வாக்குச்சாவடி அலுவலர்கள் தலைமையிலான குழுக்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் ஆதார் எண்களை சேகரிக்கும் பணியை தொடங்குகிறார்கள்.
இந்த பணிகள் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்காளர்களிடம் இருந்தும் ஆதார் எண்ணை படிவத்தில் முறையாக பெறுவதற்கு தேர்தல் பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வருகிற 1-ந்தேதிக்கு பிறகு ஆதார் விபரங்கள் சேகரிப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.