கர்நாடக மாநிலத்தில் ஒரே ஆண்டில் 3-வது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மங்களூரு மின்சார வினியோக நிறுவன (மெஸ்காம்) எல்லை பகுதியில் 24 பைசாவும், உப்பள்ளி மின்சார வினியோக நிறுவன (ஹெஸ்காம்) எல்லை பகுதிகளில் 35 பைசாவும், கலபுரகி மின்சார வினியோக (ஜெஸ்காம்) எல்லை பகுதியில் 35 பைசாவும், சாமுண்டீஸ்வரி மின்சார வினியோக நிறுவன (செஸ்காம்) எல்லை பகுதியில் 34 பைசாவும் அதிகரித்துள்ளது.
இந்த கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் வசூலிக்கப்படும் என்றும், இது வருகிற மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்றும் கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் மின்சார கட்டணம் மீண்டும் உயருகிறது. விலைவாசி உயர்வால் மாநில மக்கள் ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்த நிலையில் மின் கட்டணத்தை மீண்டும் அரசு உயர்த்தி இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.
மின் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளும், மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மின் கட்டணம் உயர்வு குறித்து உடுப்பியில் மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது;-
கர்நாடகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு நிலக்கரியின் விலை உயர்வுக்கு ஏற்றார் போலும், நிலக்கரி விலையை ஒப்பிட்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது என்ற புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அதாவது 3 மாதங்களுக்கு ஒருமுறை நிலக்கரி விலையை மதிப்பீடு செய்து, அதற்கு தகுந்தாற் போல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அதன்படி, தற்போது நிலக்கரி விலை உயர்வு காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய விதிமுறைகள் கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அமலுக்கு வந்திருந்தது. மாநிலத்தில் மின் கட்டணம் உயர்வதற்கு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறையே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.