சுவிற்சர்லாந்தில் வசிப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியானதும், ஆச்சரியம் தருவதுமான செய்தியொன்றினை, நேற்று அரசு அறிவித்துள்ளது. சுவிஸ் வாழ் மக்கள் பலரும் பெரும் சுமையாகக் கருதும், சுகாதார காப்பீட்டு பிரீமியங்களின் 2022 ம் ஆண்டுக்கான மாதாந்த கட்டுப்பணம் சற்றுக் குறையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 14 ஆண்டுகளில் முதல் முறையாக, கட்டாய காப்பீட்டுக்கான பிரீமியத்தின் தொகை, சராசரியாக 0.2 சதவீதம், குறையுமென மத்திய கூட்டாட்சி அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 2022 ம் ஆண்டில், அடிப்படை சுகாதார காப்பீட்டிற்கான சராசரி மாதாந்திர பிரீமியம் 315.30 பிராங்குகளாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில், இது சராசரியாக ஆண்டுக்கு 2.4 சதவீதம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் தொடர் முயற்சியில் இது தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த விலைக்குறைப்பு, நாடுமுழுவதற்கும் சமமாக இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்கள் ரீதியாக வேறுபடும் இந்த கட்டுப்பணத் தொகையின் அதிக விலைக்குறைப்பு (2.6 சதவிகிதம்) பாசெல்- நகரத்திலும், அதைத் தொடர்ந்து ஜெனீவாவிலும் (1.5 சதவீதம்), காணப்படுகிறது. அதே நேரத்தில் ஒப்வால்டன் (+ 1.4%), க்ளாரஸ் (+ 1.1%) மற்றும் நிட்வால்டன் (+ 0.9%) ஆகிய மாநிலங்களில் உயர்வு காணப்படும். திச்சினோவில், 0.1% வீதமாகவும், கிறபுண்டனில் -0.9% வீதமளவிலான இலேசான குறைவு இருக்கும். குடிமக்கள் சதவிகித அடிப்படையில் இந்தக் குறைவு மற்றும் அதிகரிப்புக்கள் கணிக்கப்பட்டிருப்பதாக அறியவருகிறது.