free website hit counter

இத்தாலி சுகாதாரத்தில் வெள்ளையாகிறது - கோடையால் சிவக்கிறது !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இத்தாலியின் இந்த வார சுகாதார தரவு மதிப்பீடுகளைத் தொடர்ந்து, வரும் திங்கட் கிழமை முதல் கொரோனா வைரஸ் தொடர்பான விதிகளை கைவிட இத்தாலியின் சுகாதார அமைச்சகம்அனைத்து பகுதிகளையும் அனுமதித்துள்ளது. ஆயினும் வாலே டி ஆஸ்டா பகுதி இதற்கு விதிவிலக்காகும்.

வாலே டி ஆஸ்டாவின் வடக்குப் பகுதியைத் தவிர, இத்தாலி முழுவதையும் குறைந்த கட்டுப்பாட்டு ‘வெள்ளை மண்டலத்திற்கு’ உட்படுத்தும் ஆணையில், நேற்று வெள்ளிக்கிழமை சுகாதார மந்திரி ராபர்டோ ஸ்பெரான்சா கையெழுத்திட்டார்.

இந்த வாரத்தில் புதிய தொற்றுநோய்களின் வீதத்தைக் காட்டும் தேசிய சராசரி Rt இனப்பெருக்கம் எண் 0.69 ஆக இருந்தது. இது கடந்த வாரத்தில் 0.68 ஆக இருந்தது. இத்தாலியின் தேசியளவில் 7 நாள் சராசரி நிகழ்வு விகிதம் 100,000 மக்களுக்கு 25 வழக்குகளில் இருந்து 16 ஆகக் குறைந்துள்ளது.

குறைந்த கட்டுப்பாட்டு வெள்ளை மண்டலத்தில் வைக்க, பிராந்தியங்கள் 100,000 குடிமக்களுக்கு 50 க்கும் குறைவான கொரோனா வைரஸ் வழக்குகளை மூன்று வாரங்களுக்கு தொடர்ச்சியாக பதிவு செய்திருக்க வேண்டும் என்பது விதியாகும் இதன் அடிப்படையில், பிராந்திய அதிகாரிகள் மீண்டும் திறப்பதற்கான குறிப்பிட்ட பிரதேசம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில், மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை கைவிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு இத்தாலி சுகாதார நிலையில் வெள்ளையாக மாறி வரும் நிலையில், இத்தாலி முழுவதும் கோடையின் கடும் வெப்பத் தாக்குதலுக்குள்ளாகும் என இத்தாலியின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியினை "நெருப்பின் வார இறுதி", என முன்னறிவிப்பாளர்களால் வர்ணித்துள்ளார்கள். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 40C க்கும் அதிகமானவெப்பநிலை காணப்படும் எனவும், இத்தாலியின் 10 நகரங்கள் ஆரஞ்சு வானிலை எச்சரிக்கையின் கீழ் வைக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. நாட்டின் முதல் "தீவிரமான" கோடைகால வெப்ப அலை இந்த வார இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தீவிர வெப்பத்திற்கான இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை 10 நகரங்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. போலோன்ஜா, போல்சானோ, புளோரன்ஸ், பெருசியா மற்றும் தொறினோ உள்ளிட்ட ஆறு நகரங்கள் இன்று சனிக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கையில் உள்ளன. நாளை ஞாயிற்றுக்கிழமை, இந்த எண்ணிக்கை 10 ஆக உயர்கிறது, ஏனெனில் அன்கோனா, காம்போபாசோ, பலேர்மோ, ரியெட்டி, ரோம் மற்றும் வெரோனா ஆகியவையும் இந்தப் பட்டியலில் இணைகின்றன.

இன்று ஆரஞ்சு எச்சரிக்கையில் உள்ள ப்ரெசியா நாளை ஞாயிற்றுக்கிழமை சிவப்பு வகைக்கு நகர்கிறது. இத்தாலிய அதிகாரிகள் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் மற்றும் வெப்ப தாக்கத்தைத் தடுக்க வயதானவர்களையும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் கவனிக்க வேண்டும் அறிவித்துயள்ளனர்.

"சஹாரா பாலை" வனத்திலிருந்து நேரடியாக மிகவும் சூடான காற்றலைகள் வருவதால் வெப்பநிலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதனால் இத்தாலியின் பல பகுதிகளிலும், 34-35C ஐ எட்டும் என்று எதிர்பார்க்கிறது. இதேவேளை இப்பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில இடங்களில் ஆலங்கட்டி மழை கூட வரலாம் எனவும் , முன்னறிவித்துள்ளது.

4தமிழ்மீடியாவின் இன்றைய சிறப்புப் பதிவுகள்....

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction