இத்தாலிய அரசு அடுத்த வாரத்தில் இருந்து, மிகவும் ஆபத்தான பிரிவுகளில் உள்ள சுமார் மூன்று மில்லியன் மக்களுக்கு கோவிட் எதிர்ப்பு தடுப்பூசியின் மூன்றாவது பூஸ்டர் ஷாட்களை வழங்கும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இத்தாலிய சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்ஸா நேற்று திங்கள்கிழமை இரவு இந்தத் திட்டத்தின் தொடக்கத் திகதி குறித்து, கொரோனா வைரஸ் அவசர ஆணையர் ஃபிரான்செஸ்கோ ஃபிக்லியூலோவுடன் சந்தித்து உரையாடினார்.
இதற்கான முதற்கட்டத்தில், புற்றுநோய் நோயாளிகள் மற்றும் மாற்று சிகிச்சை பெறுபவர்கள் போன்ற சிக்கலான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்கப்படும் என்றும், இத்திட்டத்தின் மூலம் இத்தாலியில் சுமார் மூன்று மில்லியன் மக்கள் இதனைப் பெறுவர் என்றும் தெரிய வருகிறது.
இதன்பிறகு, அடுத்தகட்டமாக, பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மூன்றாவது தடுப்பூசி மருந்துகளின் நிர்வாகம் ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் (ECDC) ஆதரிக்கப்பட்டுள்ளது.
அதிக ஆபத்துள்ள குழுக்களுக்கு பூஸ்டர் ஷாட்கள் அவசியம் என்று இத்தாலியில் உள்ள தொற்று நோய் நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள், இருப்பினும் முழு மக்களுக்கும் மூன்றாவது டோஸ் தேவையா என்பது இன்னமும் நிச்சயமாகத் தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.
இத்தாலியில் மூன்றாவது டோஸ் வெளியீட்டைத் தொடங்குவதற்கான முடிவு செப்டம்பர் 3 ஆம் திகதி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் முதலில் அறிவிக்கப்பட்டது, அதில் இத்தாலி பிரதமர் மரியோ டிராகியும் இத்தாலிக்கு தடுப்பூசி இலக்குகளை அடைய இறுதி உந்துதலுக்கு மத்தியில் கோவிட் தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதை அரசாங்கம் பரிசீலிப்பதாக உறுதிப்படுத்தியிருந்தார்.
வேறு எந்த ஐரோப்பிய நாடும் தற்போது இதுபோன்ற நடவடிக்கையை கருத்தில் கொள்ளவில்லை என்றாலும், "ஆரோக்கியத்திற்கான உரிமையைப் பாதுகாக்க" அவசியமானதாகக் கருதப்பட்டால், "பயமின்றி" தடுப்பூசிகளை கட்டாயமாக்க இத்தாலி அறிவுறுத்தும் என்று ஸ்பெரான்சா கூறினார்.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 12 வயதுக்கு மேற்பட்ட 80 சதவீத மக்கள் தடுப்பூசி போடுவதை இத்தாலி இலக்காகக் கொண்டுள்ளது என்பதும், இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று விகிதம் தற்போது ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.