கடந்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானில் பல முக்கிய நகரங்களைத் தலிபான்கள் கைப்பற்றியிருந்தனர்.
இதில் கடந்த சில நாட்களில் கைப்பற்றப் பட்ட குறைந்தது 6 முக்கிய நகரங்களில் இருந்து, போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உட்பட சுமார் 1000 குற்றவாளிகளைத் தலிபான்கள் விடுவித்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
சிறை நிர்வாகம் வெளியிட்ட தகவலை ஆதாரமாகக் கொண்டு ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ் ஊடகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இக் கைதிகளில், போதைப் பொருள் கடத்துபவர்கள் மாத்திரமன்றி, கடத்தல் காரர்கள், ஆயுதக் கொள்ளையாளர்கள் ஆகியோரும் அடங்குகின்றனர். விடுவிக்கப் பட்ட கைதிகளில், ஆப்கான் அரசால் மரண தண்டனை விதிக்கப் பட்ட அதிமுக்கிய 15 தலிபான் தீவிரவாதிகளும் அடங்குவதாகவும் தெரிய வருகின்றது.
இதேவேளை ஆப்கானிஸ்தான் இராணுவத்துக்கு இந்திய பரிசாக அளிர்த்த Mi-24 ரக இராணுவ யுத்த ஹெலிகாப்டரைத் தாம் கைப்பற்றி விட்டோம் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கண்டூஸ் பகுதியில் தலிபான்கள் இந்த ஹெலிகாப்டருடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. வீடியோக்களும் பகிரப்பட்டுள்ளன.