ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க நேட்டோ படைகள் பெருமளவில் வாபஸ் பெற்றுள்ள நிலையில், அங்கு நாளுக்கு நாள் தலிபான்களின் ஆதிக்கம் ஓங்கி வருகின்றது.
இதன் உச்சக் கட்டமாக சனிக்கிழமை தெற்கு கண்டஹார் மாகாணத்தில் கடந்த இரு கிழமைகளில் சுமார் 33 பேர் படுகொலை செய்யப் பட்டதாக சனிக்கிழமை மனித உரிமைகள் கமிசன் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கொல்லப் படுபவர்களில் அண்மைக் காலமாக தலிபான்களால் மத அறிஞர்கள், பழங்குடியினத்தவர், சிவில் சேவை தன்னார்வர்கள், மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள், பெண் பத்திரிகையாளர்கள் ஆகியோர் இலக்கு வைக்கப் பட்டு வருகின்றனர். இந்தப் படுகொலைகளை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் இவை யுத்தக் குற்றங்கள் ஆகும் என்றும் மனித உரிமைகள் அமைப்பு காட்டம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தலிபான்களின் தாக்குதல்களைக் கட்டுப் படுத்தவும், அவர்களது நடமாட்டத்தை குறைக்கவும் ஆப்கானில் உள்ள மொத்த 34 மாகாணங்களில் சுமார் 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கை ஆப்கான் அரசு அமுல் படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிய வருகின்றது.
ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் அமெரிக்கப் படை வீரர்கள் ஆப்கான் மண்ணில் இருந்து முற்றாக வெளியேறவுள்ள நிலையில், ஏற்கனவே பெரும்பாலான படையினர் வெளியாகி விட்டனர். இந்த சூழலில் முதன் முறையாக ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி அமெரிக்க அதிபர் ஜோ பைடெனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடி உள்ளார். இதன் போது இரு தலைவர்களுமே, கட்டாரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் அதே நேரத்தில் தலிபான்கள் தாக்குதல்களையும் தொடர்வது தமது நிலைப்பாட்டுக்கு எதிரானது என்பதில் உடன் பட்டனர். மேலும் ஆப்கானிஸ்தான் இராணுவத்துக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்றும் அஷ்ரப் கனியிடம் ஜோ பைடென் உறுதியளித்துள்ளார்.