ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றி தலிபான்கள் ஆட்சிக்கு வந்து 1 வாரத்துக்கும் அதிகமாகி உள்ள நிலையில் தமது தேசத்தை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்திற்கு இன்னமும் பல ஆயிரக் கணக்கான ஆப்கானியர்களும், வெளிநாட்டவரும் முற்றுகையிட்டு வருகின்றனர்.
விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் மற்றும் விமானத்தின் கீழ் பாகங்களில் ஏறி அதிலிருந்து கீழே வீழ்ந்து எனக் குறைந்தது இதுவரை 7 பேர் காபூல் விமான நிலையத்தில் பலியாகி இருப்பதாகத் தெரிய வருகின்றது. முக்கியமாக விமானத்தில் ஏற மக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்ற போது தலிபான்கள் விண்ணை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதால் பீதியடைந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் ஆப்கான் மண்ணில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றாக வெளியேறக் காலக்கெடு விதிக்கப் பட்டுள்ள நிலையில், இதற்குள் ஆப்கானில் உள்ள சுமார் 60 000 குடிமக்களையும், 15 000 அமெரிக்கர்களையும் விமானங்கள் மூலம் மீட்க அமெரிக்கா முனைப்புக் காட்டி வருகின்றது. இது மிகவும் சிரமமான காரியம் என்பதுடன் தலிபான்கள் இதற்குக் கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடென் கருத்துக் கூறும் போது, முழு உத்வேகத்துடன் ஆப்கானில் இருக்கும் மக்களை வெளியேற்ற அமெரிக்கா முயன்று வருவதாகவும், ஆயினும் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குப் பின் இந்நடவடிக்கை விரிவாக்கப் படாது என்றும் தெரிவித்துள்ளார். மறுபுறம் அமெரிக்க உளவுத்துறை ஒன்றின் தகவல் படி ISIS தீவிரவாதிகளின் ஆப்கான் பிரிவான ISISK காபூல் விமான நிலையம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையோ அல்லது ஏவுகணைத் தாக்குதல்களையோ நடத்துவதற்குத் திட்டம் தீட்டியிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதனால் ஆப்கான் மண்ணில் இருந்து பாதுகாப்பாகத் தனது குடிமக்களை வெளியேற்ற இயலுமான எல்லா வழிகளையும் அமெரிக்கா ஆராய்ந்து வருகின்றது. மறுபுறம் ஆப்கானிஸ்தான் மண்ணில் மிக வலிமையான போராளிகளால் காக்கப் படும் பஞ்சிர் பள்ளத்தாக்கை தலிபான்கள் இன்னமும் கைப்பற்றாத நிலையில், அவர்கள் 4 மணி நேரத்தில் சரணடைய வேண்டும் எனத் தலிபான்கள் கெடு விதித்துள்ளனர்.
முன்னதாக இந்த பஞ்சிர் பள்ளத்தாக்கு தலிபான்கள் மற்றும் சோவியத் படைகள் என எவராலும் வெற்றி கொள்ள இயலாத இடமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.