ராஜபக்ஷக்கள்தான் இந்த நாட்டின் பெரிய சாபம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
“நிதி பொருளாதாரம் அல்லது வேறு எந்த அமைச்சுப் பதவியை பஷில் ராஜபக்ஷவுக்குக் கொடுத்தாலும், நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டு வர முடியாது. இந்த நெருக்கடி நிலைக்கு பிரதான காரண கர்த்தாவே அவர்தான்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ தனது தாய்நாட்டுக்கு (அமெரிக்காவுக்கு) ஏப்ரல் மாதம் சென்ற பஷில் ராஜபக்ஷ தற்போது இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் அவரது தாய் நாட்டுக்குப் போவதற்கு முன்னர் இலங்கையில் பொருளாதாரம் தொடர்பான குழுவின் பிரதானியாவார். அவர் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் அங்கு போய் இருக்கவில்லையே, அவர் தான் பொருளாதாரத்தை வழிநடத்தினார். அப்போது செய்ய முடியாததையா இப்போது செய்யப் போகிறார்? தனது தாய் நாட்டுக்குச் சென்ற இந்த ஒன்றரை மாதங்களில் அவருக்கு விசேட மூளையேதும் வளர்ந்துவிட்டதா?
தேர்தல் மேடையில் கோட்டாபய ராஜபக்ஷவை பிடல் கஸ்ட்ரோ, காமீர் மொஹமட், ஸ்ரீ நேரு, துட்டுகெமுன, அனகாரிக தர்மபால என்றனர். இப்போது அவையெல்லாம் புஸ்வானமாகி போனதா? ராஜபக்ஷக்களே இந்த நாட்டின் பெரிய சாபம். சேற்றில் இருக்கும் அவர்கள் குதிக்க குதிக்க சேறுதான் அதிகரிக்குமே தவிர வேறு ஒன்றுமே நடக்கப்போவதில்லை.
இப்போது நாட்டில் ராஜபக்ஷக்கள் எதிர்ப்பு காற்று உருவாகியுள்ளது. அது எதிர்காலத்தில் புயலாக உருவாகும். இப்போது பாரிய மரங்களாக இருப்பவர்கள் எல்லாம் அந்த புயலில் காணாமல் போய்விடுவர்.” என்றுள்ளார்.