பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து, பல்லாண்டுகளாக சிறைகளில் வாடும் முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கு முடிந்தால் அரசியல் கைதிகளை நாளைய (இன்றைய) பொசன் பௌர்ணமி தினத்தில் விடுதலை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசியல் நாடகத்தை நடத்தாமல் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதாக பலமுறை உறுதியளித்திருந்தாலும், அரசியல் கைதிகளை தடுத்து வைக்க இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையில் தீர்வு காண தற்போதைய அரசாங்கம் உறுதியாக இருந்தால் முதலில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இல்லாமல் செய்து அவர்களை விடுவிக்க வேண்டும்.” என்றுள்ளார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    