free website hit counter

அனல் பறக்கும் ICC ஆட்டக்களம்!!! பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்கா வெற்றி!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

டீ20 உலகக்கிண்ண சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில்

நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட நியூசிலாந்து அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பில் மிர்செல் 27 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 25 ஓட்டங்களையும் மற்றும் டெவோன் கன்வே 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிஸ் ரவூப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 135 என்ற வெற்றி இலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஷ்வான் அதிகபட்சமாக 33 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட அதேவேள அசிப் அலி ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும் சொய்ப் மலிக் ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஹிஸ் சோதி இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதேவேளை நேற்று மாலை துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான இருபது 20 உலகக் கிண்ண குழு 1க்கான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தென் அபிரிக்கா 8 விக்கெட்களால் அமோக வெற்றி ஈட்டிக்கொண்டது .

இரு அணிகளுமஂ தமது முதலாவது போட்டிகளில் தோல்விகளைத் தழுவிய நிலையில் இன்றைய போட்டி பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.

ட்வெய்ன் ப்ரிட்டோரியஸின் துல்லியமான பந்துவீச்சுடன் ஏய்டன் மார்க்ராம், ரெசி வென் டேர் டுசென் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு வலுச்சேர்த்தன.

இன்றைய போட்டியில் தென் ஆபிரிக்க அணியிலிருந்து முற்றிலும் எதிர்பாராதவிதமாக கடைசி நேரத்தில் தனிப்பட்ட காரணத்துக்காக தானகவே நீங்கிக்கொள்வதாக குவின்டன் டி கொக் அறிவித்தார். அவருக்குப் பதிலாக ரீஸா ஹெண்ட்றிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டதுடன் ஹெய்ன்ரிச் க்ளாசென் விக்கெட் காப்பாளராக விளையாடினார்.

இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 18.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை தன் வசப்படுத்தியது.

மொத்த எண்ணிக்கை வெறும் 4 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரரும் அணித் தலைவருமான டெம்பா பவுமா 2 ஓட்டங்களுடன் முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததும் தென் ஆபிரிக்கா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ரெஸி வென் டேர் டுசென் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு பலம் சேர்தனர்.

ஹெண்ட்றிக்ஸ் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ரெசி வென் டேர் டுசென், ஏய்டன் மார்க்ராம் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச்செய்தனர்.

வென் டேர் டுசென் 43 ஓட்டங்களுடனும் ஏய்டன் மார்க் ராம் 26 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகள் அடங்கலாக 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், எவின் லூயிஸ் இன் 6 சிக்ஸ்கள், 3 பவுண்ட்றிகள் ௨ள்ளடங்களாக 35 பந்துகளில் 56 ஓட்டங்கள் உதவியுடன் 20 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 143 ஒட்டங்களைப் பெற்றது.

இவரை தவிர பொலார்ட் (26), லெண்ட்ல் சிமன்ஸ் (18), நிக்கலஸ் பூரண், கிறிஸ் கேல் ஆகியோர் 12 ஓட்டங்களையும்பெற்றனர்.இவர்களுடன் மற்றைய அதிரடி ஆட்டக்காரர்களான அண்ட்ரே ரசல், ஷிம்ரன் ஹெட்மியர், ட்வேன் ப்ராவோ ஆகியோர் ஒரு சில ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

தென் ஆபிரிக்கா சார்பில் 32 வயதான ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் திறமையாக பந்துவீசி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் கேஷவ் மஹாராஜ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.


இதற்கமைய, பாகிஸ்தான் தான் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிப் பெற்று நான்கு புள்ளிகளை பெற்றுள்ளதுடன், தென் ஆபிரிக்கா இரண்டுப்புள்ளிகளையும் தம் வசப்படுத்தியது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction