free website hit counter

உயரத்தை வென்று காட்டிய நம்பிக்கையின் ‘வெற்றி’ !

நாளும் நல்ல செய்தி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாம் என்று இருபால் மனிதர்களும் நினைப்பதுண்டு. ஆனால், உயரம் என்பதும் தோற்றம் சார்ந்த பிரஞையும் உலகை வென்று காட்டுவதற்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் மூன்றரை அடி உயரமே கொண்ட ஆர்த்தி டோக்ரா ஐ.ஏ.எஸ்.

ராஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டக் கலெக்டராக இருந்து அந்த மாவட்டத்தையே தனது விரல் நுணியில் வைத்திருக்கிறார் ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ். சட்டத்துக்குப் புறம்பான எந்தக் காரியமும் ஆர்த்தியின் ஆட்சிப் பணியில் நடைபெற்றதில்லை.

ஜோத்பூரிலிருந்த ஆர்த்தியை ஆஜ்மீர் மாவட்டத்துக்கு சமீபத்தில் பணிமாற்றம் செய்தது, ராஜஸ்தான் அரசு. கலெக்டர் மாற்றப்பட்டது குறித்து தகவல் பரவ, அதை எதிர்த்து ஜோத்பூர் மக்கள் மாவட்ட அலுவலகத்தில் குவிந்தனர். ஆட்சியரைச் சந்தித்து `இங்கிருந்து போகக் கூடாது' என மன்றாடினார்கள். `அரசு பணியில் இதுவும் ஓர் அங்கம்தான்' என்றவாறு மக்களைச் சமாதானப்படுத்தினார் ஆர்த்தி. ஆனால் மக்கள் அவரது வாகனத்தின் முன்பு தர்னாவாக உட்கார்ந்துவிட்டார்கள்.

மக்களின் அன்பையும் அரசாங்கத்தின் ஆச்சரியத்தையும் பெற்ற ஆர்த்தி டோக்ராவின் தந்தை, ராணுவத்தில் பணிரிந்தார். தாயார், பள்ளி ஆசிரியை. 1979-ம் ஆண்டு பிறந்த ஆர்த்திக்கு, வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி இல்லை. பெற்றோர் கவலைப்பட்டார்கள். மிகவும் குள்ளமான உருவம்கொண்டிருந்தார். உறவினர்கள், `இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்' என்று ஆர்த்தியின் பெற்றோரை வற்புறுத்தினார்கள். `இனிமேல் எங்களுக்கு வேறு குழந்தை வேண்டாம். ஆர்த்திதான் எங்கள் உலகம்' என்று பதிலளித்துவிடுவார்கள் ஆர்த்தியின் பெற்றோர்.

பிரேசில் தேசத்திலிருந்து ஒரு பெண்ணின் கண்ணீர் குரல்!

டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பொருளியல் பட்டம் பெற்ற ஆர்த்தி, முதுகலைப் படிப்புக்காக டேராடூன் சென்றார். அங்கே ஐ.ஏ.எஸ் அதிகாரியான மனிஷாவைச் சந்தித்தார். அதுவரை ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஆர்த்தியிடம் கிடையாது. ஆர்த்திக்குள் ஒளிந்திருந்த திறமைகளை அடையாளம் கண்டுகொண்ட மனிஷா, ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது, `நீங்கள் ஏன் ஐ.ஏ.எஸ் படிக்கக் கூடாது?' எனக் கேட்டார். இந்தக் கேள்விதான் ஆர்த்தியின் வாழ்க்கைப் பயணத்தை மாற்றியது. ஆட்சியருக்குத் தேவையான கம்பீரம், தோரணை குறித்தெல்லாம் ஆர்த்தி யோசிக்கவேயில்லை. யூ.பி.எஸ்.சி தேர்வுக்கு, தன்னை தயார்ப்படுத்த ஆரம்பித்தார். 2006-ம் ஆண்டு முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவும் உயர்ந்தார்.

உயரம் மூன்றரை அடி என்றாலும், பணியில் தீரம் மிகுந்தவர் ஆர்த்தி. சுத்தம் சோறு போடும் என்ற பழமொழியில் ஆர்த்திக்கு அதீத நம்பிக்கை உண்டு. தான் ஆட்சியராகப் பணியாற்றிய மாவட்டங்களில் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு ஆஜ்மீர் மாவட்ட ஆட்சியராக ஆர்த்தி பணிபுரிந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலேயே பொதுவெளியில் மலம் கழிக்கும் கிராமங்கள் நிறைந்த மாவட்டமாக ஆஜ்மீர் இருந்தது. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்து கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புஉணர்வு ஏற்படுத்தினார் ஆர்த்தி. அரசு அலுவலர்களையும் விழிப்புஉணர்வில் ஈடுபடவைத்தார்.

ஒரு பேரழிவின் சாட்சியாக மறைந்தும் உயிர் வாழ்கிறாள் ஒமைரா !

திறந்தவெளியில் மலம் கழிக்கும் மக்கள் நிறைந்த 219 கிராமங்களை அடையாளம் கண்டு `புக்கா டாய்லெட்' எனப்படும் பிளாஸ்டிக் கழிவுகளுடன் சிமென்ட் பயன்படுத்தி கழிவறைகளைக் கட்ட நடவடிக்கை எடுத்தார். ஆஜ்மீரில் இவர் ஆட்சியராக இருந்த சமயத்தில் 800 கழிவறைகள் கட்டப்பட்டன. கழிவறை கட்ட முடியாத ஏழைகளுக்கு, கழிவறை கட்ட மாவட்ட நிர்வாகம் தங்குதடையின்றி நிதி அளித்தது. இதனால், ஆஜ்மீர் மாவட்டத்தில் குடிசை வீட்டுக்குக்கூட சுத்தமான சுகாதாரமான `புக்கா டாய்லெட்' கிடைத்தது. ஆர்த்தியின் இந்த `புக்கா டாய்லெட்' திட்டம் பெரும் வெற்றிபெற்றது.

இந்தியாவின் பல்வேறு மாநிலப் பிரதிநிதிகளும் ஆர்த்தியின் `புக்கா டாய்லெட்' திட்டத்தைப் பார்வையிட்டு, தங்கள் மாநிலங்களில் அதேபோன்று அமல்படுத்தியுள்ளனர். தாய்லாந்து, நேபாளம் போன்ற நாடுகளிலிருந்துகூட புக்கா டாய்லெட் முறை பற்றித் தெரிந்துகொள்ள ஆஜ்மீர் வருகிறார்கள். இதற்குமேல் என்ன வேண்டும்.. தான் மக்களின் ஆட்சியர் என்பதை நிரூபித்துவிட்டார் ஆர்த்தி டோக்ரா. சாமானிய மக்களின் மனதில் ‘மக்கள் ஆட்சியர் என்று பெயர் பெற்று உயர்ந்து தனது குறைவான உயரத்தை வென்று காட்டிவிட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction