உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமானின் திவ்ய பெருங்கருணைக்குப் பாத்திரமாகிய சைவசமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருடய குருபூசைத் தினம் இன்றாகும்.
சுந்தரத் தமிழால் சிவனைக் குறித்துப் பதிகம்பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் புண்ணிய பூமியான இந்தியாவி லேயுள்ள திரு முனைப்பாடி நாட்டிலே திருநாவலூரிலே திரு அவதாரம் செய்தார்.
ஆதிசைவ வேதியர் குலத்திலே சடையனார் இசைஞானியார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த இவருக்கு “நம்பியாரூரர்” என்பது இளமைப் பெயராகும். இவரது பேரழகைக் கண்ட நாட்டு மன்னர் நரசிங்க முனையர் என்பவர் இவரைத் தம்மோடு அழைத்துச் சென்று தாமே வளர்த்து வரலாயினர். இப்படி வளர்ந்த நம்பியாரூரருக்குத் திருமணம் பேசினர்.
திருமண மண்டபத்திலே இவரைத் தடுத்தாட்கொள்வதற்கு வந்த சிவபெருமான் கிழப்பிராமணராகக் காட்சியளித்து, ‘இந்த நம்பியாரூரர் எனக்கு அடிமை’ என்று கூறித்தமுடன் வருமாறு அழைத்தார். பிராமணக்குப் பிராணமர் எங்காவது அடிமையாவதுண்டா? என்று நம்பியாரூரர் அவரைக் கோபித்துக் கேலி செய்தார். அதற்கு அவர், “நீ எனக்கு அடிமைதான். இதோ எழுத்திலேயே இருக்கிறதே!” என்று ஓர் ஓலையைக் காட்டினார். உடனே நம்பியாரூரர் அவ்வோலையைப் பறித்துக் கிழித்து எறிந்தார். ‘பித்தா! பேயா!” என்று பேசினார். ஆனால் வந்த கிழப்பிராமணர் விடவேயில்லை. இரண்டு பேருக்குமிடையே தகராறு முற்றியது. மூல ஓலையைக் காட்டி, “நீ எனக்கு அடிமை தான்” என்பதை நிரூபித்தார். ஈற்றில் சுந்தரர் பணிந்து போக வேண்டியதாயிற்று.
“அப்படியாயின் உமது இருப்பிடத்தைக் காட்டும்?” என்று வினவவே, வந்தவர், “என்னைத் தெரியவில்லையா?” என்றபடியே திருவருட்டுறைக் கோயிலுள்ளே சென்று மறைந்தார். நம்பியாரூரர் திகைத்துப் போய் நின்றார்.
அப்போது சிவபெருமான் இடபாரூடராய்க் காட்சி கொடுத்தார். உடனே வீழ்ந்து வணங்கிய நம்பியாரூரரைப் பார்த்து, “சுந்தரா! சுந்தரத் தமிழால் எம்மைப் பாடுக!” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
ஐயனே! நான் எப்படிப் பாடுவேன் என்று அவர் பணிந்துநின்றார். “அன்பரே! பித்தா பேயா என்று ஏசியபடியே பித்தா என்றே தொடங்கிப் பாடுக!” என்று அருளிச் செய்தார்.
இறைவன் திருவருளால் உடனே “பித்தாப்பிறைசூடி” என்று தொடங்கிப் பதிகம் பாடினார். இவ்வாறு தொடங்கிய சுந்தரர் ஆலயங்கள் தோறும் சென்று பதிகம் பாடி வணங்கிவரலாயினார். சுந்தர மூர்த்தி நாயனார் இறைவனைத் தோழனாகவே உருவகித்துப்பாடினார். அதனால் தம்பிரான் தோழர் என அழைக்கப்பட்டார்.
இந்த சுந்தர மூர்த்தி நாயனார் பல அற்புதங்களைச் செய்திருக்கின்றார். செங்கட்டிகளைப் பொன்கட்டியாக மாற்றினார். ஆற்றிலிட்ட பொன்னைக் குளத்திளே எடுத்தார்.முதலை விழுங்கிய பிள்ளையை மீட்டருளினார். பர்வையாரையும் சங்கிலியாரையும் திருமணம் செய்வதற்காக இறையருளால் பல்வேறு திருவிளையாடல்கள் இடம் பெற்றுள்ளன.
சுந்தரமூர்த்தி நாயனார் பல பதிகங்கள் பாடி இறையருள் பெற்று இனிதே வாழ்ந்திருக்கும் போது ஒருநாள் தம்முடைய வாழ்நாள் போது மென்றும், இப் பூவுலகிலே பிறந்து உழன்றது திருவருள் வசத்தாலென்றும், இனி இதுபோதும் வாழ்க்கையை முடித்து முத்திதர வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டாராம். தம் அடியவரான வன்றொண்டனின் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட சிவபிரான் தேவர்கள் மூலமாக வெள்ளையானை ஒன்றை அனுப்பிவைத்தார்.
அழகே உருவான வெள்ளையானை ஒன்று வந்து நின்றது. உடனே சுந்தரர் அந்த வெள்ளையானை மீது ஏறி அமர்ந்தார். அது அவரைச் சுமந்து சென்று திருக்கைலாய மலையிலே விட்டது. இது இறையருளால் நிகழ்ந்த அற்புதமாகும்.
இனிக்கும் செந்தமிழால் அரிய கருத்துக் களடங்கிய தேவராத் திருப்பதிகங்கள் பாடியருளிய சுந்தர மூர்த்தி சுவாமிகள் தமது 18 ஆவது வயதிலே ஆடி மாத சுவாதி நட்சத்திர நாளிலே முத்திப் பேறடைந்தார். அந்த இனிய நாள் இன்றாகும். ஆதலால் எம்பெருமானுடைய திருவருட்டிறத்தினால் திருப்பதிகங்கள் பாடிய இவரை நினைந்து குருபூசையைக் கொண்டாடுவதோடு மட்டும் நின்றுவிட்டாமல் அவர் காட்டிய நல்ல நெறியில் நாமும் சென்று இறையருள் பெற எல்லாம் வல்ல சிவனருளையே நாடி நிற்போமாக.
- “தெய்வத் தமிழ்ச்சுடர்” இராசையா ஸ்ரீதரன்
இந்த ஆண்டு இவரது குருபூஜையினை முன்னிட்டு, இணையத்திலே ஏழு நாட்கள் தொடர் உரைகளுடன் கூடிய, "சுந்தரர் ஸப்தாஹம்" இணையப் பெருவிழாவாக நடைபெறுகிறது. இந்த விழாவின் இரண்டாம் நாளில், தற்புருஷ சிவாச்சார்யார் தில்லை கார்த்திகேயசிவம் அவர்களின் சிறப்புரை.