மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதையின் நாயகன் கிருஷ்ணன். பகவானே பிரியமுற்றுக் கூறுவதாக இருப்பதால் அது சிறப்பாகத் தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு வகையில் சிறப்பாகவே இருக்கிறது. அப்படியிருக்கும்போது மார்கழி மாதத்தினை தனது பிரியமான மாதமாக பகவான் சொல்வது ஏன் ?
நமது ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு பொழுதாகவும், அதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான ஆறு மாதங்கள் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் இராப் பொழுதுகளாகவும் வேதாந்த நூல்களில் விதந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகற்பொழுதை உத்தராயண காலம் எனவும் இரவுப் பொழுதை தட்சணாயன காலம் என்றும் அவை கூறுகின்றன. அந்த வகையில் தேவர்களது இரவுப் பொழுதின் இறுதிப் பகுதியாகவும், புதிய நாளின் அதிகாலைப் பொழுதாகவும் இந்த மார்கழி மாதம் அமைகின்றது. மனித ஜீவன்களுக்கு மட்டுமல்லாது உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகள் எல்லாவற்றுக்கும் காலைப்பொழுது உற்சாகம் நிறைந்ததாகவே உள்ளது. அதனால்தான் மார்கழி மாதத்தை பகவான் விரும்புகிறார் போலும்.
தேவர்களுக்கு இந்த மாதம் உதய நாழிகையாக அமைவதை கருத்திற்கொண்டே மார்கழி மாதத்தில் திருப்பள்ளியெழுச்சி பூஜையும், திருவெம்பாவை விரதமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என முன்னோர் கூறியுள்ளனர். மங்கலம் நிறைந்த காலை பொழுதில் பரம் பொருளைப் பாடிப் பரவி ஆன்ம முன்னேற்றத்திற்கு வழி சமைக்கும்விதத்தில் இந்த திருவம்பாவை விரதமும், திருப்பள்ளி எழுச்சிப் பூஜையும் அமைந்துள்ளது. இந்த வழிபாடுகளுக்கு சிறப்பு சேர்க்கும் மற்றொரு அம்சம் திருவாசகத் தேனை உலகுக்கு அளித்த மணிவாசகப் பெருமானின் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.
அதிகாலைப் பொழுதில் துயில் கலைந்து எழும் கன்னிப் பெண்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளின் திருவருளைப் பாடி, நித்திரையில் ஆழ்ந்துள்ள தம் தோழியரை துயில் கலையச் செய்து பிறவிப் பிணி தீர்க்க அழைக்கும் விதமான காட்சி வர்ணனை பாடல்களாக அமைந்துள்ள பாடல்கள் திருவாசகத்துக்கு மட்டுமல்லாது தமிழ் மொழிக்கும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. "பாவை பாடிய வாயால் கோவை பாடுக" என ஆண்டவனையே நேயர் விருப்பம் கேட்க வைத்த முதற் படைப்பாளி மாணிக்கவாசகர் சுவாமிகளாகத்தான் இருக்க முடியும். திருவெம்பாவை பாடல்களின் பொருள் இனிமையால் கவரப்பட்ட இறைவன் கேட்தற்காகவே திருக்கோவையார் பாடினார் என்பது வரலாறு.
இவ்வாறு காட்சி வருணனை பாடல்களாக இப்பதிகங்கள் அமைந்துள்ள போதிலும், அவற்றின் உள்ளார்ந்த தத்துவம் மாயையில் விழுந்து கிடக்கும் ஆன்மாவை, துயில் கலையச் செய்து பரம்பொருளின் பாதார விந்தங்களைச் சரண் அடைக என அறிவுரை சொல்வதாகவும் உள்ளன. உன்னைச் சரண் அடையும் ஜீவாத்மாக்கள் பிறவிப் பிணியில் இருந்து காத்தருள வேண்டுமென்று இறைவனை வேண்டுவதாகவும் அமைகிறது.
கன்னிப்பெண்கள் திருவெம்பாவை காலத்திலே அதிகாலை எழுந்து, நீராடி விரதமிருந்து இறைவனை துதித்தால் நல்வாழ்வு அமையுமென சாஸ்திரங்கள் சொல்கின்றன. இந்து சமயத்தின் மற்றொரு பிரிவான வைணவ சமயத்தில் கண்ண பரமாத்மாவை தன் காதலனாக, நாயகனாக, நினைத்து , போற்றித் துதித்து, பரம்பொருளோடு சேர்ந்து கொண்ட சூடிக்கொடுத்த நாச்சியார் என்ற சிறப்பு பெற்ற ஆண்டாள் நாச்சியாரும் அவள் திருப்பாவையும் கூட இந்த மார்கழி மாதத்திலே சிறப்புப் பெறுகின்றது.
சிதம்பரத்தில் கோயில் கொண்டருளிய ஆலவாய் பெருமானுக்குரிய நடராஜர் அபிஷேகங்களில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது இந்த மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறும் அபிஷேகமும் அதன் பின்னான ஆருத்ரா தரிசனமும் ஆகும்.
அதிகாலைப் பொழுதில் ஓங்காரமாய் ஒலிக்கும் ஆலயமணியின் ஓசையும், இதமான குளிர் காற்றில் கலந்து வரும் பஜனைப்பாடல்களும், திருவெம்பாவை பூஜை காண விரையும் மக்களும், அவர்களை பஜனை பாடி எழுப்பும் பஜனை குழுவினரின் வருகைக்கு கட்டியம் கூறுகின்ற சங்கொலியும், " எம்பாவாய்" என எங்கும் கேட்கும் திருவெம்பாவை பாடலும் பாடல் ஒலியும் என ஈழம் வாழ் இந்துகளின் வாழ்நாளிலும் இந்த மார்கழி மாத பூஜை மனம் நிறைந்ததாகவும் மங்கலம் தருவதாகவும் அமைந்திருந்தது.
-நாகரன்