தமிழின் பேச்சு வழக்கில் அலைபாயும் மனநிலையினை, மரத்துக்கு மரம் தாவும் மந்தியோடு உருவகித்து, 'மனம் ஒரு குரங்கு ' என்பார்கள்.
லௌகீக வாழ்வில் இவ்வாறு அலைபாயும் மனத்தினை ஒருநிலைப்படுத்தினால் உயரிய பலன்கலையும், வலிமையையும் பெற்றிடலாம் என்பதனை உணர்த்தி நிற்கும் அவதாரத் தோற்றம் ஶ்ரீ ஆஞ்சநேயர்.
ஒரு காவியக் கதாபாத்திரமாக மட்டுமல்லாது, சிவபெருமானின் அம்சமாகவும் போற்றப்படுபவர் அனுமான் என்றழைக்கப்படும் ஶ்ரீ ஆஞ்சநேயர். ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறந்த மார்கழி மாதம் மூலம் நட்சத்திர தினம் “அனுமன் ஜெயந்தி” தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சநேயர் ஜெயந்தி இந்தியாவின் பல பகுதிகளில் வெவ்வேறு திகதிகளில் கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவில் மார்கழி மாத அமாவாசை மற்றும் மூலநட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இதுவே வட இந்தியாவில் சித்திரை மாதம் சுக்ல பக்ஷ தசமியன்று கொண்டாடப்படுகிறது.
அனுமனை " சுந்தரன்" என அழைத்து மகிழ்ந்தவர் ஆஞ்சநேயரின் தாயான அஞ்சனா தேவி. அந்தப் பெயரை முன்வைத்து, வால்மீகி " சுந்தரகாண்டம் " பகுதியை ஆக்கினார். ஶ்ரீராமர் மீதான அளவற்ற பக்தி கொண்ட ஆஞ்சநேயரின் பக்தி வன்மை அவருக்கு சிரஞ்சீயாக வாழும் வரத்தினை வழங்கியது. இதனால் இன்றும் இமய மலையில் அருவமாக ராமதியானத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஈடுபட்டிருப்பதாகவும், ராமாயணத்தினைப் பாராயணம் செய்யும் இடங்களில் அவர் பிரசன்னமாயிருந்து ராமர் புகழைக் கேட்டு மகிழ்ந்திருப்பதாகவும் ஆஞ்சநேய பக்தர்கள் நம்புகின்றார்கள்.
மனித வாழ்வில் ஏற்படும் துக்கங்கள், கஷ்டங்கள் நீங்கவும், பீடைகள் ஒழியவும், கிரக தோஷம் குறிப்பாக சனி கிரக தோஷம் நீங்கவும், டுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்ற நன்மைகள் பெறவும், ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியை மக்கள் அதிகளவில் வழிபாடியற்றுகின்றார்கள்.
ஆஞ்சநேயரின் வாழ்க்கை நமக்கு பாசம், கருணை, தைரியம், மற்றும் சேவை மயமான வாழ்க்கையை வலியுறுத்துகிறது. ஆஞ்சநேயரை "சிற்று வேடமுடைய பெருமாள்" என்று அழைக்கிறார்கள், மற்றும் அவர் ஆற்றல் நிரம்பிய மகா சக்தியின் அடையாளமாக கருதப்படுகிறார்.
குபேர ஆஞ்சநேயர், வீரஆஞ்சநேயர், அபயவரத ஆஞ்சநேயர், யோக ஆஞ்சநேயர் , ராமபக்த ஆஞ்சநேயர் எனப் பலதோற்றங்களில் ஶ்ரீஆஞ்சநேயரின் படங்கள் இருந்தாலும், கரம் குவித்தபடி நின்று ராமவழிபாடியற்றும் ஆஞ்சநேயர் படம், வீடுகளில் வைத்து வழிபாடியற்ற நன்மை கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.