free website hit counter

தீபம் ஏற்றிடுவோம் கார்த்திகையில் !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இல்லக விளக்கது இருள் கெடுப்பது என்கிறது அப்பர் தேவாரம். விளக்கு எனும் தீபம் ஏற்றுவது மங்கலம் தரும் விஷயம்.அதனால்தான் தமிழர்தம் வாழ்வியலின் முக்கிய தருணங்கள், வழிபாடுகளின் போதெல்லாம் தீபம் ஏற்றுதல் முக்கியம் பெறுகிறது.

வீடுகளில் ஐந்துமுக குத்துவிளக்கு அல்லது காமாட்சி விளக்கில் தீபம் ஏற்றலாம். தினமும் தீபம் ஏற்றி வழிபடுவது மூலமாக நவக்கிரகங்களை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும். விளக்கு சூரியனாகவும், அதில் ஊற்றப்படும் நெய் சந்திரனாகவும்,விளக்கின் சுடர் செவ்வாயாகவும், திரி புதனாகவும், சுடரின் மஞ்சள் நிறம் குருவாகவும், திரி எரிய எரியக் குறைவது சுக்கிரனாகவும், திரியில் உள்ள கரியானது சனீஸ்வரனாகவும், சுடரின் நிழல் ராகுவாகவும், அதன் வெளிச்சம் கேதுவாகவும் கருதப்படுகிறது. இதன் மூலம் நவக்கிரகங்களை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும்.

கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேரும் நாளில் கொண்டாடப்படுவது திருக்கார்த்திகை. இதற்காக இரு புராண வரலாறு கூறப்படுகிறது. ஒருமுறை பிரம்மா, மகாவிஷ்ணுவுக்குள் சிறந்தவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதற்காக ஜோதி வடிவாக நின்ற சிவபெருமான் தன் அடி, முடியை முதலில் கண்டு வருபவரே சிறந்தவர் எனத் தீர்ப்பளித்தார். பன்றி வடிவத்தில் மகாவிஷ்ணுவும், அன்னப்பறவையாக பிரம்மாவும் உருமாறி அடி, முடியைத் தேடிச் சென்றும் காண முடியவில்லை. அப்போது சிவபெருமான் ஜோதி வடிவமாகத் தோன்றினார். அந்த நாளே திருக்கார்த்திகை. இந்த இதிகாச கதைப்பிரகாரமே திருவண்ணாமலையில் ஜோதி ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

மற்றொரு வரலாறு முருகனுடன் தொடர்புடையது. சிவனின் நெற்றிக் கண்ணில் வெளிப்பட்ட தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக அவதரித்தன. கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்க்கப்பட்ட அக்குழந்தைகளை பார்வதி ஒன்றாகச் சேர்த்து ஆறுமுகனாக மாற்றினாள். அந்த நாளே கார்த்திகை.

ஒளி வடிவாக இறைவனை வழிபடுவதும், இறைவனை தீபத்தின் வழியாக அழைப்பது மட்டுமல்லாது தீபத்தின் ஒளியால் வீடு ஜொலிக்க விடுவது தான் கார்த்திகை தீபத்தின் சிறப்பு. விளக்கு ஏற்றுவதால் புற இருள் மட்டுமின்றி அறியாமை என்னும் அக இருளும் மறையும். விளக்குகளின் ஒளியைக் கண்டால் மனதில் புது நம்பிக்கை பிறக்கும். வீடுகளில் தினமும் விளக்கேற்றுவதன் மூலம் விளக்கேற்றிய புண்ணியமும், ஒளியைப் பரவச் செய்த மகிழ்வும் நமக்கும் கிடைக்கும். கார்த்திகைத் திருநாளில் இந்த உறுதிமொழியை நம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்போம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula