சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் அற்ற ஆட்சியை நிலைநிறுத்திவிட முடியும் என்று நம்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கனவு எதிர்க்கட்சிகளினால் கலைக்கப்பட்டிருக்கின்றது. நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்தினை அமைத்து செயற்பட வேண்டிய அவசியம் இருப்பதாக ரணில் தொடர்ந்தும் கூறிவருகிறார்.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகியதும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட ரணில், பொதுஜன பெரமுன ஆளுமை செலுத்தாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்ளை கோட்பாடுகள் கொண்ட அரசாங்கமொன்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அதற்கு ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது அணியினரும் பெருந்தடையாக இருந்தார்கள். அப்படியான நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை உடனடியான சீர்செய்ய முடியாது, அவ்வளவுக்கு ராஜபக்ஷக்கள் சீரழித்து வைத்திருக்கிறார்கள் என்ற தொனிப்பட ரணில், தொடர்ந்தும் உரைகளை ஆற்றிவந்தார். நெருக்கடி நிலை இன்னும் இன்னும் மோசமடையும் என்றும் அவர் எச்சரிக்கத் தொடங்கினார். அதுதான், கோட்டாவுக்கு எதிரான போராட்டம் அடுத்த கட்டத்தை அடைந்து, அவரை நாட்டைவிட்டு ஓடவும் வைத்தது.
அந்தச் சந்தப்பத்திற்காக காத்திருந்த ரணில், சரியான விதத்தில் காய்களை நகர்த்தி, பதவியில் இருந்து விரட்டப்பட்ட ராஜபக்ஷக்களின் ஒத்துழைப்போடு ஜனாதிபதி பதவிக்கும் வந்துவிட்டார். அன்றிலிருந்து, ஐ.தே.க.வை மீளவும் நிலைநிறுத்தும் வேலைகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். அதன்மூலம், நாட்டுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தி கட்சியின் நேரடி ஜனாதிபதியாக தான் போட்டியிட்டு தேர்வாக வேண்டும் என்று நினைக்கிறார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்கள் அணிக்குள் இருந்து ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஏனெனில், ராஜபக்ஷக்கள் தவிர்ந்த ஒருவரை, பொதுஜன பெரமுனவுக்குள் இருந்து ஜனாதிபதியாக முன்னிறுத்தும் எண்ணம் ஏதும் ராஜபக்ஷக்களுக்கு இல்லை. தங்களைத் தாண்டி வேறு யாரையாவது பொதுஜன பெரமுனவுக்குள் இருந்து ஜனாதிபதி பதவியைப் பிடித்துவிட்டால், கட்சியும் எதிர்கால ஆட்சிக்கனவும் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடும் என்று ராஜபக்ஷக்களுக்கு தெரியும். அதனால், தங்களது கட்சிக்குள் இருந்து இன்னொருவரை வளர்த்துவிடும் எந்த எண்ணப்பாட்டிலும் அவர்கள் இல்லை.
இப்போது உடல் – மன ரீதியாக தளர்ந்து போயிருக்கிற மஹிந்த, கட்சியை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவுக்கு இல்லை. ஆனாலும், எப்படியாவது கட்சியைக் காப்பாற்றி, அதன் தலைமைப்பீடத்தில் தன்னுடைய மகனான நாமல் ராஜபக்ஷவை இருந்திவிட வேண்டும் என்று நினைக்கிறார். அதன்மூலமே, நாமலை எதிர்காலத்தில் ஜனாதிபதியாக்கி ஆட்சியை ராஜபக்ஷக்களிடம் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது அவரது எண்ணம். அதற்கு, ரணிலை தற்போதைக்கு ஆதரிப்பதுதான் இருப்பதில் ஒரே வழி. அதனால்தான், ரணிலை வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்காக மஹிந்த மிகுந்த பிரயத்தனப்பட்டார். அதனால், கோட்டாவின் மிகுதி ஆட்சிக்காலத்துக்காக ரணில் வந்தார். பாராளுமன்ற வாக்கெடுப்பில் வென்றதும் மஹிந்தவின் வீட்டுக்கு தேடிச் சென்ற ரணில், அங்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக தனிப்பட்ட உரையாடலை நிகழ்த்தியுள்ளார். இதன்போது, இருவரும் பொதுஜன பெரமுனவையும், ஐ.தே.க.வையும் மீளவும் உயிர்ப்போடு மீட்டெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தி உரையாடியிருக்கிறார்கள். அதன்மூலமே, ராஜபக்ஷக்களின் வாரிசு அரசியலும், ஐ.தே.க.வின் வம்ச அரசியலும் நிலைத்து நிற்கும் என்று நம்புகிறார்கள். அதற்காக, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டால், அதனை ஆதரிக்கும் கட்டத்தில் ராஜபக்ஷக்கள் இருக்கிறார்கள். இங்கு ராஜபக்ஷக்கள் என்று குறிப்பிடப்படுவது பஷில், கோட்டா தவிர்ந்த ராஜபக்ஷக்களை. ஏனெனில், பஷிலுக்கும் ஜனாதிபதிக்கனவு உண்டு. அதற்காக அவர் இன்னமும் காய்களை நகர்த்தி பொதுஜன பெரமுனவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான வேலைகளில் ஈடுபடுகிறார். ஆனால், மஹிந்த சகோதரர்களை குறிப்பாக, பஷிலை நம்பும் கட்டத்தில் இல்லை. ஏற்கனவே கோட்டாவிடம் ஆட்சியைக் கொடுத்து, ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாத அளவுக்கான வேலைகளை செய்துவிட்டார் என்பது அவரது கோபம். அதுபோல, பஷிலின் நடவடிக்கைகளே ராஜபக்ஷக்கள் மீது ஊழல்வாதிகள் என்ற அடையாளத்தை ஏற்படுத்திவிட்டது என்ற ஆத்திரம் மஹிந்தவிடம் உண்டு. பஷில், பாரம்பரிய அரசியல்வாதிகளுக்கு உரிய குணவியல்புகள் இன்றி, தனியாவர்த்தனம் செய்து பணத்தை குவிப்பதிலேயே கவனம் செலுத்துவார். இதனால், ஆட்சி அரசியலில் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கான வாய்ப்புக்களை ராஜபக்ஷ குடும்பம் இழந்துவிடும் என்பது மஹிந்தவின் எண்ணம். இதனால்தான், பஷில் கட்சிக்குள் வகிக்கும் பதவியை நாமலிடம் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்று அவர் முயன்றுவருகிறார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்கள் யார் போட்டியிட்டாலும் வெற்றிபெற முடியாது என்பது வெளிப்படையானது. அப்படியான நிலையில், அதற்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலை குறிவைத்து மஹிந்த செயற்பட நினைக்கிறார். அதில், நாமலை வேட்பாளராக்கி வெற்றிபெற வைக்க வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
இன்னொரு பக்கத்தில், ரணிலுக்கு இப்போது 74 வயது கடந்துவிட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றால், அதில் வெற்றிபெற்று ஜனாதிபதி பதவியை அடைந்தால், 81 வயது வரை ஆட்சியில் இருந்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிடலாம். நாட்டு மக்களால் நேரடியாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும் என்கிற அவா ரணிலுக்கு எப்போதும் உண்டு. அதுதான், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசியல் வாரிசாக அவர் விரும்புவது. அதுவே, ஐ.தே.க.வை, தன்னுடைய அரசியல் வாரிசான ருவான் விஜயவர்த்தனவிடம் குழப்பங்கள் இன்றி கையளிக்கவைக்கும் என்பது அவருக்கு தெரியும்.
இப்படியான கட்டத்தில்தான், மஹிந்தவும் ரணிலும் தெளிவான இணக்கப்பாட்டோடு தங்களது அரசியலை தற்போது செய்து வருகின்றார்கள். அதன்போக்கில்தான், சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் சதித்திட்ட யோசனையோடு ரணில் முன்வந்திருக்கின்றார். சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை மெல்ல மெல்ல நலிவடையச் செய்துவிடலாம் என்பது அவது எதிர்பார்ப்பு. தான் பிரதமர் பதவிக்கு வந்ததுமே, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான நபர்களில் ஒருவரான ஹரீன் பெர்ணான்டோவை பிரித்தெடுக்க முடிந்த அவரால், சர்வகட்சி அரசாங்கம் அமைந்து, அதில், ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களுக்கு பிரதான அமைச்சுக்களை வழங்கி, ஆட்சியின் பங்காளியாக்கிவிட்டால், சஜித் பிரேமதாசவிடம் இருந்து அவர்களை இலகுவாக பிரித்தெடுத்துவிடலாம். அதன்மூலம், ஐ.தே.க.வில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைந்து கட்சியை பலப்படுத்த முடியும். ஆனால், அந்த எண்ணத்தைப் புரிந்து கொண்ட சஜித், தன்னுடைய கட்சியை சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம்பெற வைப்பதில் இருந்து விலகினார். அத்தோடு, பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையைப் பேணுவதுதான், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்தும். அது இல்லாமல், ஆட்சியில் பங்காளியாகிவிட்டு, ‘ராஜபக்ஷக்கள்- ரணில்’ இணக்கப்பாட்டோடு நடைபெறும் ஆட்சியை விமர்சிக்க முடியாது. அதனை, மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். ரணிலும் ராஜக்ஷக்களும் கட்சிகள், இயக்கங்களை இலகுவாக உடைந்துவிடுவார்கள். கடந்த காலங்களில் அவ்வாறான வேலைகளை நிகழ்த்தியும் காட்டியிருக்கிறார்கள். அதனால், சஜித், ஐக்கிய மக்கள் சக்தியை கட்டிக் காப்பாற்றுவதிலேயே கவனமாக இருக்கிறார். அடுத்த தேர்தல் வரையில், பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியை பேணவே அவர் விரும்புகிறார். இதனால்தான், ரணிலின் சர்வகட்சி அரசாங்கம் என்ற பொறியில் இருந்து சஜித் விலகியிருக்க நினைத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் அங்கம் வகிக்காத அரசாங்கத்தை சர்வகட்சி அரசாங்கமாக முன்னிறுத்த முடியாது. ஏனெனில், தற்போதையை பாராளுமன்றத்துக்குள் எதிர்வரிசையில் ஆரம்பம் முதல் இருக்கும் முதல் மூன்று கட்சிகள் இவை. இந்தக் கட்சிகளைத் தவிர்த்துவிட்டு எவ்வாறான ஆட்சிகள் அமைக்கப்பட்டாலும் அது சர்வகட்சி அரசாங்கம் என்ற பெயரைப்பெறாது. அதனை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக தன்னைத் தயார்ப்படுத்தும் ரணிலின் திட்டங்களில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் போட்டியிட்டால், அது தனக்கு பெரும் நெருக்கடியாக இருக்கும் என்று அவருக்கு தெரியும். அதன்போக்கிலேயே, சஜித் அணியை அவர் உருக்குலைக்கும் வேலைகளுக்காக சர்வகட்சி அரசாங்கம் என்ற பெயரோடு வந்தார். ஆனால், அது சாத்தியமில்லை என்றாகிவிட்டது. அதனால், சஜித்தோடு இருப்பவர்களை தனித்தனியாக இழுத்து ஆட்சியில் பங்காளியாக்க அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதனைத் தவிர்த்து, சர்வகட்சி அரசாங்கம் என்பதெல்லாம் மக்களை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் என்பதெல்லாம் வெறும் மாயை.