free website hit counter

சீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது. தெற்காசியாவின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடற்பகுதிக்குள் மணலை நிரப்பி புதிய துறைமுக நகர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுக நகர் கடந்த நல்லாட்சிக் காலத்தில் இணைக்கப்பட்டாலும், அதன் ஆட்சியுரிமை என்பது துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக சீனாவிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு பற்றி தென் இலங்கையில் கடந்த காலங்களில் பேசிக் கொண்டிருந்த தரப்புக்கள் எல்லாமும் துறைமுக நகர் விடயத்தில் கிட்டத்தட்ட பேசாமடைந்தைகளாக மாறிவிட்டன. இலங்கை, பௌத்த சிங்களவர்களுக்கானது என்று மதவாத பேரினவாத சிந்தனைகளை கடந்த காலங்களில் கொண்டு சுமந்தவர்கள் எல்லோரும், கொழும்பு துறைமுக நகர் விடயத்தில் மூச்சைக்கூட விடவில்லை. தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கைகளைக்கூட பிரிவினைவாதமாக முன்னிறுத்தி அயோக்கியத்தனம் புரிந்தவர்கள், இன்றைக்கு தனி நாடு ஒன்றுக்கான அதிகாரத்தை துறைமுக நகருக்கு வழங்கும் போது வாய்மூடி மௌனிகளாகிவிட்டனர். அவர்களின் வாய்களை எத்தனை மில்லியன் ‘யுவான்கள்’ நிறைந்தன என்பதுதான் இப்போதைய கேள்வி.

பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில் கொழும்புத் துறைமுகம் மிகவும் திட்டமிட்ட முறையில் தெற்காசியவின் முதன்மை துறைமுகமாக உருவாக்கப்பட்டது. பம்பாய், கல்கத்தா துறைமுகங்கள் போல, கொழும்புத் துறைமுகத்தின் உட்புற – வெளிப்புற கட்டமைப்புக்களும் முதலிடத்தில் பேணப்பட்டன. இன்றைக்கும் கொழும்புத் துறைமுகத்தின் கட்டமைப்பு என்பது பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து பெரியளவில் மாறிவிடவில்லை. கொழும்புத் துறைமுகம் பம்பாய், கல்கத்தா துறைமுகங்களை விட அதன் அமைவிடத்தினால் எப்போதுமே முதன்மையாக விளங்கி வந்திருக்கின்றது. அதாவது, உலகம் பூராவும் பயணிக்கும் கப்பல்களில், மூன்றில் ஒரு மடங்கு கப்பல்கள் பயணிக்கும் வழித்தடத்தில் கொழும்புத் துறைமுகம் அமைந்திருக்கின்றது. சரக்குகளை ஏற்றி இறக்குதல் மாத்திரமின்றி, கப்பல்களுக்கான எரிபொருள் நிரம்புதல், உணவுக் கொள்வனவு தொடங்கி இன்னோரென்ன தேவைகளுக்காகவும் ஒரு தரிப்பிடமாக கொழும்பு துறைமுகம் விளங்கி வருகின்றது.

சிங்கப்பூர் தன்னுடைய பொருளாதாரத்தை பல வழிகளில் பெருக்கிக் கொண்டது. ஆனால், அதில் துறைமுகத்தைக் கொண்டு உருவாக்கிய பரிவர்த்தனை என்பது மிக முக்கியமானது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் சிங்கப்பூரின் வளர்ச்சி என்பது அதன் துறைமுகக் கட்டமைப்பில் பெருமளவு தங்கியிருக்கின்றது. பசிபிக் –இந்து சமுத்திர கப்பல் வழித்தடங்களில் கொழும்புத் துறைமுகத்தை மீறி சிங்கப்பூர் துறைமுகம் தன்னை பல மடங்கு வளர்த்துக் கொண்டது. ஆனாலும் கூட இன்றைக்கும் இந்தியத் துறைமுகங்களை விட வெளிநாட்டுக் கப்பல்களின் போக்குவரத்து என்பது கொழும்புத் துறைமுகத்தோடே பேணப்பட்டு வருகின்றது. அப்படியான நிலையில், கொழும்புத் துறைமுகத்தின் தேவை என்பது பிராந்திய வல்லரசுகளுக்கு அவசியப்படுவது என்பது இயல்பானதுதான். அதாவது, நலிந்தவனிடம் இருக்கும் அனைத்துமே வலியவனுக்குரியது என்பது அதர்மத்தின் விதி. அந்த விதியில் நின்றுதான் சீனாவும் இந்தியாவும் மல்லுக்கட்டின. கொழும்புத் துறைமுகத்தினை பகுதி பகுதியாக கூறுபோடும் வேலைகளைச் செய்தன. அதில், சீனா கிட்டத்தட்ட முழுமையான வெற்றியைப் பெற்றுவிட்டது.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா கோரிய போது, கடந்த நல்லாட்சி அரசாங்கம் அதற்கு ஒத்துழைத்தது. ஆனால், அதற்கு எதிராக தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாதத் தரப்புக்கள் தொடங்கி பல்வேறு தரப்புக்களும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தன. கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்ற முடிவுக்கு அரசாங்கம் வந்தது. வேணுமென்றால் மேற்கு முனையத்தை இந்தியா பெற்றுக் கொள்ளலாம் என்றவாறாக முன்வைப்புச் செய்யப்பட்டது. கிழக்கு முனையம் விவகாரத்தில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்த தரப்புக்களின் பின்னால், சீனா இருந்தமைக்கான சந்தேகம் வெளியிடப்பட்டது. ஏனெனில், அந்தச் சக்திகள் கொழும்பு துறைமுக நகர் விடயத்தில் அமைதியாவிட்டன.

கொழும்புத் துறைமுக நகருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்கள், கிட்டத்தட்ட தனி நாட்டுக்கு ஒப்பானவை. அப்படியான நிலையில், அங்கு ஆட்சி செலுத்தும் தரப்புக்கள் தங்களது நலன்களுக்காக அனைத்து வகை ஏற்பாடுகளையும் அங்கு செய்யும். அத்தோடு, தன்னைச் சுற்றியுள்ள கட்டமைப்புக்களை உடைப்பது முதல் உளவு பார்ப்பது வரையில் செய்யும். இலங்கையின் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு என்பது கொழும்புக்குள்ளேயே சுருக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அதனை கண்காணிப்பது என்பது துறைமுக நகரின் ஆட்சித் தரப்புக்களுக்கு இலகுவானது. அத்தோடு, கொழும்புத் துறைமுகத்தின் இயக்கத்தை முழுவதுமாக கண்காணித்து எதிர்காலத்தில் கட்டுப்படுத்தும் தளத்துக்கும் தன்னை முன்னிறுத்தும்.

சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை முழுவதுமாக விழுந்துவிட்டது. அதிலிருந்து மீள்வது என்பது அவ்வளவு இலகுவாதனல்ல. ஏனெனில், வறிய ஆபிரிக்க நாடுகள் பலவற்றுக்கு சீனா வழங்கிய கடன்கள் மீளப்பெறும் நோக்கோடு வழங்கப்பட்டவை அல்ல. மாறாக, அந்தக் கடன்களுக்காக அந்த நாடுகளின் வளங்களை சுரண்டுவதற்கான முழுமையான அனுமதியைப் பெறும் நோக்கில் வழங்கப்பட்டவை. எத்தியோப்பியா, நைஜீரியா, சம்பியா, அங்கோலா தொடங்கி பல ஆபிரிக்க நாடுகளிலும் ஆட்சிகள் மாறினாலும், சீனாவின் வளச்சுரண்டலுக்கான அனுமதியில் யாரும் தலையிடுவதில்லை. ஏனெனில், அந்த நாடுகள் சீனாவின் கடன்பொறிக்குள் முழுவதுமாக சிக்கிவிட்டவை. கேள்விகளைக் கேட்க முடியாது என்ற நிலையை சீனா அங்கு பெற்றுவிட்டது. அப்படியான நிலையையே இலங்கையிலும் சீனா இன்றைக்கு செய்து கொண்டிருக்கின்றது.

கொழும்பு துறைமுக நகருக்கான தங்கு தடையின்றிய அனுமதியைப் ஆணைக்குழு சட்டத்தினை நிறைவேற்றி பெற்றுக்கொண்டதோடு, கொழும்பின் பிரதான பகுதிகளிலுள்ள அரச நிலங்களையும் கொள்வனவு செய்யும் முனைப்போடு சீனா இயங்கிக் கொண்டிருக்கின்றது. பொலிஸ் தலைமையகம் அமைந்திருக்கின்ற கொழும்பின் மையப்பகுதி தொடங்கி, காலி முகத்திடலை அண்மித்த பல பகுதிகளையும் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்க அரசாங்கம் முயல்வாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ராஜபக்ஷக்களின் முதல் ஆட்சிக் காலத்தில், காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்திருந்த இராணுவத் தலைமையகம் அங்கிருந்து கொழும்பின் புற நகருக்கு மாற்றப்பட்டு, அந்தப் பகுதி சீனாவின் முக்கிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இன்றைக்கு அந்தப் பகுதியில் பிரதான நட்சத்திர விடுதிகள், கடைத் தொகுதிகள் முளைத்திருக்கின்றன. அவ்வாறானதொரு நிலை, கொழும்பின் பல பகுதிகளுக்கும் எதிர்காலத்தில் நேரலாம் என்ற அச்சம் அதிகரித்திருக்கின்றது.

இப்படியாக இலங்கையை சீனா கூறுபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா அணிலை மரத்தில் ஏறவிட்ட நாயின் நிலைக்கு வந்திருக்கின்றது. ஒரு காலத்தில் இலங்கையை பெரியண்ணன் நிலையில் இருந்து இந்தியா கையாண்டிருக்கின்றது. ஆனால், அந்த நிலை இன்று இல்லை. கொழும்பு நிலப்பகுதிகள் மாத்திரமல்ல, கொழும்பு ஆட்சிக் கட்டமைப்பும் சீனாவின் பிடிக்குள் சென்றுவிட்டது. அப்படியான நிலையில், அந்தக் கட்டமைப்புக்குள் ஆளுமை செலுத்துவது என்பது இந்தியாவினால் இனி முடியாத காரியம்.

கொழும்பை முன்னிறுத்திய சர்வதேச ஆட்டத்தில் பெரும் நிதியைக் கொண்டு சீனா வெற்றிருக்கின்றது. சீனாவின் வெற்றிக்கு தென் இலங்கையில் ஆட்சியாளர்கள் பலமாக ஒத்துழைத்திருக்கிறார்கள். அந்த ஒத்துழைப்பு என்பது நாட்டின் எதிர்காலத்தைக் குறித்த சிந்தனையோடு வழங்கப்பட்டது அல்ல. மாறாக, அவர்களின் தனிப்பட்ட குடும்ப ஆட்சி நலன்களை முன்னிறுத்தி வழங்கப்பட்டவை. அது, நாட்டை தீராத கடன்களுக்குள் சிக்க வைத்துள்ளதுடன், நாட்டு மக்களை பெரும் பொருளாதார சுமைக்குள் தள்ளியிருக்கின்றது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction