ஞாயிற்றுக்கிழமை தனது தேசிய தின உரையின் போது பேசிய தாய்வான் அதிபர் சாய் இங் வென், சீனா கூறும் வழியில் தாய்வான் நடக்க வேண்டும் என எந்தவொரு சக்தியாலும் எம்மை வலுக்கட்டாயப் படுத்த முடியாது என்றும் தாய்வான் தொடர்ந்து தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி வரும் என்றும் கூறியுள்ளார்.
இந்த உரையின் போது, சுமார் 23 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தாய்வானுக்கு எந்தவொரு சுதந்திரமான ஜனநாயகத்தையுமோ அல்லது இறையாண்மையை உறுதிப் படுத்தும் விதத்திலான ஒரு பாதையை சீனா எமக்குக் காட்டவில்லை என்பதே இதற்கு முக்கிய காரணம் என்றும் தாய்வான் அதிபர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய கோவிட் பெரும் தொற்று பற்றிய சமீபத்திய செய்திகள் சில :
உலகளவில் கோவிட் பெரும் தொற்றால் 6 இலட்சம் மக்களது உயிர்கள் பறிக்கப் பட்ட 2 ஆவது நாடாக பிரேசில் மாறியுள்ளது. பிரேசில் பல மாதங்களாக எதிர் கொண்டு வந்த கடினமான இந்த கோவிட் சூழல் தற்போது அங்கு அதிகரிக்கப் பட்டு வரும் தடுப்பூசி போடப் படும் நடவடிக்கைகளால் சற்று மீட்சியடைந்து வருவதாகத் தற்போது கூறப்படுகின்றது.
பிரேசில் இந்தளவுக்கு கோவிட்-19 தொற்றால் கடுமையாகப் பாதிக்கப் பட அதிபர் பொல்சனாரோ தலைமையிலான அரசின் அலட்சியப் போக்கே காரணம் என அங்கு பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்திய டெல்டா வைரஸ் திரிபாலும் பிரேசில் அதிகளவு பாதிக்கப் பட்டதாகத் தெரிய வருகின்றது.
உலகளவில் கோவிட் பெரும் தொற்றை வெற்றிகரமாகக் கையாண்ட நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவில் சமீபத்திய டெல்டா வைரஸ் மாறுபாட்டால் தொற்றுக்கள் திடீரென அதிகரித்தன. இதையடுத்து 5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிட்னி நகரில் சுமார் 100 நாட்கள் லாக்டவுன் பிறப்பிக்கப் பட்டது. ஆயினும் அங்கு 70% வீதமான பொது மக்களுக்கு தடுப்பூசி ஏற்கனவே போடப் பட்டு விட்டதால் அங்கு லாக்டவுனைத் தளர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.