வரலாற்றில் இதுவரை இல்லாதளவு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலும் மேற்கு அமெரிக்காவின் சில பகுதிகளிலும் கடும் வெப்ப அலைத் தாக்கம் நிலவி வருகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டன் என்ற கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மிக அதிகபட்சமாக 49.6 செல்சியஸ் டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
கடும் வெப்ப அலை காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மாத்திரம் கடந்த 1 வாரத்தில் 719 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த வருடங்களை விட 3 மடங்கு அதிகமாகும். பலியானவர்களில் மிக அதிகளவானவர்கள் முதியவர்களும், நோய் வாய்ப் பட்டவர்களும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக இப்பகுதிகளில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் இடை நிறுத்தப் பட்டுள்ளன.
இந்நிலையில் லிட்டன் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் காட்டுத் தீ அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது அங்கு பெரும் பொருள் சேதங்களை விளைவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.