“உழலை ஒழிக்கிறோம்” என நண்பர் அனுர கூறுவதை, நான் வரவேற்கிறேன். இது எனது கொள்கையும் ஆகும். ஆனால், இதை மட்டும் சொல்லி, நாள்தோறும் புது, புது பொய்களையும் சொல்லி, இனியும் நாட்டை நடத்த முடியாது.
நாட்டின் முதல் முக்கியத்துவம் பொருளாதாரத்துக்கு வழங்கப்பட்டே ஆகவேண்டும். இல்லா விட்டால் வர்த்தகம், தொழிற்துறை கடுமையாக பாதிக்கபடும். வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடும். பண புழக்கம் கணிசமாக குறையும். இந்திய பொருளாரத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி, விசேட வர்த்தக சலுகைகளை கோரி பெற்று முன்னேறுவோம் என்றால், அதை செய்ய அனுர அரசுக்கு பொருளாதார தூர நோக்கு இல்லை. ஆகவே, அடுத்த வருட முதல் காலாண்டில், பொருளாதார நெருக்கடிக்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதை எதிர் கொள்ள நாம் கூட்டாக தயாராவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நேற்று மட்டக்குளியில் நிகழ்ந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இந்த அரசாங்கம் இலங்கை வரலாற்றில் மிக பெரும் பலத்துடன் ஆட்சிக்கு வந்தது. ஆனாலும், ஆறே மாதத்துக்குள், பொருளாதார துறையில் திக்கு முக்காடி நிற்கிறது. “அரசாங்க செலவை குறைக்கிறோம், உழலை ஒழிக்கிறோம், ஊழல் செய்தவர்களை வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறோம்” என்ற நண்பர் அனுரவின் அரசு சொல்வதை நான் நூற்றுக்கு நூறு வரவேற்கிறேன். இவை எனது கொள்கைகளும் தான்.
ஆனால், இதை மட்டும் சொல்லி, சொல்லி, நாட்டை நடத்த முடியாது. நாள்தோறும் பொய்களை மாத்திரம் சொல்லி அரசாங்கத்தை நடத்த முடியாது. நாட்டின் முதல் முக்கியத்துவம் பொருளாதாரத்துக்கு வழங்கபட்டே ஆகவேண்டும். ஆனால், அதை செய்ய அனுர அரசுக்கு தூர நோக்கு இல்லை.
ஏற்றுமதியில் வீழ்ச்சி, வெளிநாட்டு மூலதனம் அறவே இன்மை, வேலை இழப்பு, பண புழக்கம் குறைவு என்பவற்றை தவிர்க்க இந்திய பொருளாரத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி விசேட வர்த்தக சலுகைகளை கோரி பெற்று முன்னேறுவோம் என்றால், அவை அரசாங்க செவிகளில் ஏறவில்லை.
2024ம் வருடம் 5 விகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2025ம் வருடத்தில் 3.5 விகிதமாக குறையலாம் என உலக வங்கி ஆரூடம் கூறியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்பின் வரி கொள்கை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் இருந்து இலங்கைக்கு முதலீடுகள் வருவது நின்று போய், இன்று கணிசமான இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலகங்களை இந்தியாவை நோக்கி கொண்டு செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆகவே, இவை எல்லாம் சேர்ந்து, அடுத்த வருட முதல் காலாண்டில், பொருளாதார நெருக்கடிக்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
இந்நிலையில், இன்று நாம் இடம்பெறும் அரசியல் கூட்டணியை மேலும் விரிவு படுத்தி ஊழல் இல்லாத, ஆனால், “அனுபவம், ஆற்றல்” கொண்ட மிகப்பெரிய அரசியல் கூட்டணியை கட்டி எழுப்பும் முயற்சிகளை நாம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டோம். மக்கள் ஆணையுடன் வந்துள்ள அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கம் எமக்கு கிஞ்சித்தும் கிடையாது. ஆனால், எமக்கான தேசிய பொறுப்புகளை நாம் நிறைவேற்ற தயங்க மாட்டோம்.
கொழும்பில் நாம் பலமாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில், கொழும்பு மாநகர சபை - தெகிவளை மாநகர சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளின் அனைத்து வட்டாரங்களிலும் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களியுங்கள். பாராளுமன்ற தேர்தலின் போது, வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தமையை தவிர்த்து, முகம் தெரியாத நபர்களுக்கு வாக்களித்தமையையும் நிவர்த்தி செய்து, இந்த தேர்தலில் அணிதிரண்டு வாக்களியுங்கள். இந்த முறை வாக்கு சீட்டில் விருப்பு வாக்கு இலக்கங்கள் இல்லை. வேட்பாளர் பெயர்கள் இல்லை. கட்சி சின்னங்கள் மாத்திரமே இருக்கும். ஆகவே சின்னங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்