இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. அதற்கமைய ஜப்பானிலிருந்து பெறப்பட்ட எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்றைய தினம் நாட்டில் 174,985 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில் இதுவரை எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது அளவு 630,136 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை நாட்டில் சைனோபார்ம் தடுப்பூசியின் முதல் அளவு 203,515 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதுடன் சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது அளவு 18,483 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் அளவு இதுவரை 159,081 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் இரண்டாவது அளவு 14,503 பேருக்கு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்து ஆய்வை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டத்திற்கு பாராட்டை தெரிவித்துள்ளார். இலங்கை சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை செப்டம்பர் மாத இலக்கிற்கு முன்னரே முன்னெடுத்து வருகின்றமை குறித்து மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.